இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்; 29 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலத்தின் 425 கிராமங்களைச் சேர்ந்த 97,182 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அவசரக் கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
குமே ஆற்றின் மேல்நிலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் டாமின் மற்றும் பார்சி-பார்லோ வட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. அப்பகுதிகளில் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அரசு ஆய்வு மாளிகை, தேவாலயம் மற்றும் முன்னணி கல்வி நிறுவனமான செயின்ட் தாமஸ் பள்ளியும் நீரில் மூழ்கியுள்ளன.
இதுபோல பக்ரோ கிராமம் அருகே ஏற்பட்ட பிரம்மாண்ட நிலச்சரிவால் 13-ம் எண் தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் முடங்கியுள்ளது. சேலா சுரங்கப்பாதைச் சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதால், பயணிகள் பழைய சேலா சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், போதின்-கிமின் சாலையும் முடங்கியுள்ளது.
இந்தக் வெள்ளப் பெருக்கால் 541.75 ஹெக்டேர் பயிர் நிலங்களும், 1,010 ஹெக்டேர் வனப் பகுதியும் நாசமாகியுள்ளன. மேலும் 150 சாலைகள், 19 பாலங்கள், 221 குடிநீர் விநியோகக் கட்டமைப்புகள், 58 அரசு கட்டிடங்கள், 10 நீர் மின் நிலையங்கள், 2 மருத்துவமனைகள், 3 பள்ளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. தற்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட மாவட்ட நிர்வாகம், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து தீவிர ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.