மனைவி பாயல் அப்துல்லா உடன் உமர் அப்துல்லா |கோப்புப் படம்

 
இந்தியா

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா - பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

மோகன் கணபதி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் அவரது மனைவி பாயல் அப்துல்லாவும் விவாகரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

17 ஆண்டுகளாக பிரிந்து இருக்கும் இருவரும், ஒருவருக்கொருவர் எதிராக தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும் டெல்லியைச் சேர்ந்த பாயல் நாத்துக்கும் 1994-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜமிர், ஜாஹிர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2009-ம் ஆணடு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், ஒருவர் மீது ஒருவர் பல வழக்குகளை தொடுத்தனர்.

இந்நிலையில், அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோருவதாக இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கூட்டு மனு கடந்த 22ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உமர் அப்துல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இருவரும் சுதந்திரமாக வாழ முடிவெடுத்துள்ளனர். இருவருக்கும் இடையே இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டன. நீதிபதிகள் இருவருக்கும் விவாகரத்து வழங்கலாம். மற்ற அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்” என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், “நல்லது. அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் நாங்கள் இந்த வழக்கை முடித்து வைப்போம். ஒருவருக்கு எதிராக மற்றவர் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற இருவரும் ஒப்புக்கொண்டுள்ள விவரங்களை நீதிமன்றம் தனது உத்தரவில் பதிவு செய்யும்” என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT