பத்ரிநாத் காணிக்கை திருட்டு: குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரிடமிருந்து பணம், நகை மீட்பு

பத்ரிநாத் கோயில் 

பத்ரிநாத் கோயில் 

Updated on
1 min read

டேராடூன்: பத்ரிநாத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரி நாராயணன் கோயிலில் காணிக்கை திருட்டில் ஈடுபட்ட நபரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சமோலி காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தின் இமயமலை பகுதியில் 10,279 அடி உயரத்தில் பத்ரிநாத் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் இந்த கோயில் நடை திறந்திருக்கும். ஓராண்டில் சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

பத்ரிநாத் கோயிலின் காணிக்கை பணம் திருடப்படுவதாக பைரவ் சேனா சங்கம் சார்பில் காவல் துறையில் ரகசியமாக புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் கடந்த ஜூன் 25-ம் தேதி பத்ரிநாத் கோயிலின் காணிக்கை எண்ணும் பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் ரகசியமாக கண்காணிக்கப்பட்டது. அப்போது கோயில் ஊழியர் பிரமோத் நவுடியால் காணிக்கை பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பிரமோத் நவுடியாலை கடந்த 12-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து அவர் விசாரிக்கப்பட்டார். அப்போது, பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் கமிட்டி அலுவலகம், டேராடூனில் உள்ள அவரது இல்லம், பத்ரிநாத்தில் உள்ள அவரது தங்குமிடம் ஆகிய இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பத்ரிநாத் காவல்நிலைய பொறுப்பு அதிகாரி மகாதேவ் உனியால், “பத்ரிநாத் கோயிலில் பிரமோத் நவுடியாலுக்கு ஒதுக்கப்பட்ட தங்கும் அறையில் இருந்து வெள்ளி நாணயங்கள், சிறிய வெள்ளி சிலைகள், சிறிய வெள்ளி ஆமை உருவங்கள், நேபாள நாட்டு நாணயத் தாள்கள் அடங்கிய கட்டுகள், சில ரொக்கப் பணம் ஆகியவை மீட்கப்பட்டன. கோயில் நன்கொடை முறைகேடு புகாருடன் இவற்றுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

விசாரணையின்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நவுடியாலின் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை எவ்வாறு வாங்கப்பட்டன என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் குற்றத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கலாம் என்பது குறித்து நவுடியால் எதுவும் தெரிவிக்கவில்லை. அவரது போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.” என்று தெரிவித்தார்.

பத்ரிநாத் கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கான ஒருங்கிணைப்பாளராகவும், நன்கொடை எண்ணும் பணியை கண்காணிப்பதற்கான பொறுப்பாளராகவும் பிரமோத் நவுடியால் இருந்து வந்தார். காணிக்கை திருட்டு தொடர்பாக காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டு வருவதோடு, மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும் தனிப்பட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

<div class="paragraphs"><p>பத்ரிநாத் கோயில்&nbsp;</p></div>
“மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” - 19 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தாவில் தஸ்லிமா நஸ்ரின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in