புதுடெல்லி: ஹரியானாவில் 25 வயதுப் பெண்ணை லிப்ட் தருவதாக அழைத்துச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹரியானாவின் பரிதாபாத், மெட்ரோ சவுக் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 25 வயது பெண் ஒருவர் கல்யாண்புரி சவுக் செல்ல காத்திருந்தார்.
அப்போது மாருதி வேனில் வந்த இரு ஆண்கள் லிப்ட் தருவதாக கூறி அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பிறகு ஓடும் வேனில் இருந்து வெளியே தள்ளிவிட்டு, தப்பிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக உ.பி. மற்றும் ம.பி.யை சேர்ந்த இருவரை பரிதாபாத் போலீஸார் பிடித்து விசாரித்தனர். இருவரையும் நேற்று கைது செய்தனர். குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பரிதாபாத் போலீஸார் நேற்று கூறியதாவது: வேனில் இருந்து வெளியே வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அந்தப் பெண் ஒருவழியாக சமாளித்து தனது சகோதரியை உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து சகோதரி அங்கு விரைந்து வந்து அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
பிறகு சகோதரியின் புகாரின் அடிப்படையில் மறுநாள் கோட்வாலி காவல் நிலையத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சம்பவ நாளில் அந்தப் பெண் தனது தோழியின் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். கல்யாண்புரி சவுக் செல்வதற்கு எந்த வாகனமும் கிடைக்காததால் அவருக்குத் தாமதமாகிவிட்டது. அவருக்கு லிப்ட் கொடுத்த இரு ஆண்களும் கல்யாண்புரி சவுக் செல்வதற்கு பதிலாக குருகிராம் சாலையில் சென்றுள்ளனர். பிறகு இந்த கொடூர குற்றத்தை இழைத்துள்ளனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.