

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்த, இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ நேற்று அளித்த பேட்டியில், “இந்தாண்டில் சீனா தலையிட்ட முக்கிய விஷயங்களின் பட்டியலில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமும் ஒன்று” என குறிப்பிட்டார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அதிபர் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அதேபோன்ற கருத்தை சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். இது நாட்டின் பாதுகாப்பை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது.
அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் சீனா தொடர்ந்து எதிராக செயல்படுகிறது. இது போன்ற சூழலில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் சீனா ஆற்றிய பங்கு என்ன என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.