கடந்த 16-ம் தேதி ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்வர் மோகன் சரண் மாஜி.

 
இந்தியா

ஒடிசா: கடந்த 3 ஆண்டுகளில் தீ விபத்துகளால் 416 பேர் உயிரிழப்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஒடிசாவில் கடந்த 3 ஆண்டுகளில் தீ விபத்துக்களால் 416 பேர் உயிரிழந்துள்ளதாக சட்டப் பேரவையில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் தற்போது சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் திடீர் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு அம்மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதன் விவரம்: “கடந்த 2022-23-ஆம் ஆண்டில் ஒடிசா முழுவதும் நிகழ்ந்த தீ விபத்துக்களில் 192 பேர் உயிரிழந்தனர். இது, 2023-24-இல் 118 ஆகவும், 2024-25-இல் 106 ஆகவும் இருந்தது. இதன்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 416 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த தீ விபத்துக்களால் ரூ.27.84 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன.

          

இவை ஒருபுறம் இருக்க, பாம்பு கடித்தல், மின்னல் தாக்குதல், நீரில் மூழ்குதல் என கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த திடீர் விபத்துக்களால் 6,578 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், மின்னல் தாக்கியதால் மட்டும் 1,336 பேர் உயிரிழந்துள்ளனர். பாம்புக்கடியால் 2023-24-இல் 1,147 பேரும், 2024-25 இல் 971 பேரும் உயிரிழந்துள்ளனர்.

பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே ஒடிசா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் இது ஒரு தீவிரமான கவலையாக உள்ளது” என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT