புனே: 12 வருட ஆட்சியின் பிரதமர் நரேந்திர மோடி மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
புனேவில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய அவர் கூறியதாவது: “கட்சித் தலைவர்களின் செயல்பாட்டை பொறுத்தே தேர்தலில் போட்டியிடுவதும், வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் அமையும். உங்களுக்கு (காங்கிரஸ் கட்சி) 10 வருடம் கொடுக்கப்பட்டது. அதில் ரூ.12 லட்சம் கோடி ஊழலும், மோசடியும் நடந்தது.
அதனால் மக்கள் உங்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றினர். அதோடு நரேந்திர மோடியை பிரதமராக அமர வைத்தனர். இந்த 12 வருட ஆட்சியில் அவர் மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை.
நான் ராகுல் காந்திக்கு ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிப்பதன் மூலம் நீங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியாது. வெளிநாடுகளுக்கு செல்வதை விடுத்து, உள்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். அதைவிடுத்து உலக நாடுகள் போற்றும் தலைவர்களில் ஒருவரான பிரதமர் மோடி மீது அவதூறு பேசுவதை நிறுத்துங்கள். எப்படியும் நீங்கள் இதை கேட்க போவதில்லை.
அத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது தொடர்ந்தால் 30 ஆண்டுகள் ஆனாலும் நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது” என்று தெரிவித்தார்.