லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், ஜேவாரில் அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அறிவித்துள்ளார்.
இதன்படி, இந்த விமான நிலையம் ‘நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம், நொய்டா’ என அழைக்கப்படும் என்றும் அவர் தெரித்துள்ளார். பிரதமர் மோடி அரசு தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் கவுரவிக்கும் வகையில் தீர்மானத்தையும் மாநில அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.
மோடி 2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு 2014 முதல் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார். இதன்படி, அவர் அரசுத் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். நொய்டா சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கி இயக்கும் 40 ஆண்டு ஒப்பந்தம், சுவிட்சர்லாந்தின் ஜூரிக் ஏர்போர்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனத்துக்கு 2020ம் ஆண்டு வழங்கப்பட்டது. பிரதமர் மோடி 2021 நவம்பர் 25ம் தேதி இதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்ட இது, டெல்லி தேசியத் தலைநகர்ப் பகுதியின் இரண்டாவது மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையமாகும். கடந்த வெள்ளிக்கிழமை கூடிய உத்தரப் பிரதேச அமைச்சரவை, பிரதமர் மோடியின் தொடர்ச்சியான 25 ஆண்டு பொதுச் சேவையைப் போற்றும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அக்டோபர் 7ம் தேதி நாட்டின் வரலாற்றில் பெருமைமிகு அத்தியாயம் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும், 25 ஆண்டுகள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் ஆதித்யநாத் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினராக இருந்தபடி மோடி நாட்டை வழிநடத்துவது மாநிலத்துக்குப் பெருமை என்று ஆதித்யநாத் கூறினார். 2017-க்கு முன்பு மாநிலத்தில் நிர்வாகத் திறனின்மை, பாதுகாப்பின்மை, அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை இருந்ததாகவும், பிரதமரின் அனுபவத்தால் புதிய ஆட்சிக் கலாசாரம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார். வெளிப்படையான நிர்வாகம், சிறந்த சட்டம் ஒழுங்கு, நவீன உள்கட்டமைப்பு ஆகியவை இப்போது மாநிலத்தின் அடையாளங்கள் என்றும் கூறினார்.