தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தமிழ் வம்சாவளி சட்ட நிபுணரான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தமிழ் வம்சாவளி சட்ட நிபுணரான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு
Updated on: 
2 min read

ஓஸ்லோ: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம் பிள்ளைக்கு (85) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசை மட்டும் நார்வே நோபல் கமிட்டி அறிவிக்கிறது. இதர 5 பிரிவுகளுக்கான நோபல் பரிசை சுவீடன் அமைப்புகள் அறிவிக்கின்றன.

208 தனிநபர்கள்

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உட்பட 208 தனிநபர்கள் மற்றும் சர்வதேச நீதிமன்றம் உட்பட 79 அமைப்புகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இந்த பட்டியலை நார்வே நோபல் குழுவின் தலைவர் ஜோர்ஜென் வாட்னே ஃப்ரைட்னெஸ் தலைமையிலான 6 பேர் குழு தீவிரமாக பரிசீலனை செய்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம் பிள்ளை அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை படுகொலை

தென்னாப்பிரிக்காவின் வெள்ளையின ஆதிக்கத்துக்கு எதிராக நெல்சன் மண்டேலா மிக நீண்ட காலமாக போராடினார். இதன்காரணமாக கடந்த 1964 முதல் 1982-ம் ஆண்டு வரை ராபன் தீவில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அப்போது மண்டேலா உள்ளிட்ட தலைவர்களுக்கு சிறையில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சட்டரீதியாக நவநீதம் பிள்ளை போராடினார். இதில் அவருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்பிறகே நெல்சன் மண்டேலா உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி கிடைத்தது.

தென்னாப்பிரிக்க தலைவராக மண்டேலா பதவியேற்ற பிறகு உயர் நீதிமன்ற நீதிபதியாக நவநீதம் பிள்ளையை நியமித்தார். இதன்மூலம் அந்த நாட்டில் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை நவநீதம் பெற்றார். பெண்களின் உரிமைக்காக சர்வதேச சமஉரிமை இயக்கத்தை அவர் தொடங்கினார்.

பேருந்து ஓட்டுநரின் மகள்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவில் இருந்து ஏராளமானோர் தென் ஆப்பிரிக்காவுக்கு கரும்பு, தேயிலை தோட்டப் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்படி கடந்த 1860-ம் ஆண்டு நவம்பரில் இந்தியாவின் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு ஏராளமான தமிழர்கள் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த நகரில் தற்போது 3.78 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர்.

டர்பன் நகரில் கடந்த 1941-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி நாராயணசாமி நாயுடு, சாந்தம்மா தம்பதியின் 5-வது மகளாக நவநீதம் பிறந்தார். அவரது தந்தை பேருந்து ஓட்டுநர் ஆவார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், டர்பன் நகர தமிழ் சமுதாய மக்களின் பங்களிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் சட்டப் படிப்பை நிறைவு செய்தார்.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கடந்த 1962-ம் ஆண்டில் பரம்ஜோதி “கேபி” அந்தோணி பிள்ளையை அவர் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஈஸ்வரி, காமினி ஆகிய மகள்கள் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தமிழ் வம்சாவளி சட்ட நிபுணரான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக அமோக வெற்றி: இடைத்தேர்தலில் தொகுதிகளை இழந்த அதிமுகவுக்கு 3-வது இடம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in