புதுடெல்லி: சமையல் காஸ் விநியோகத்தில் சிக்கல் நீடித்தாலும் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா உலகின் 2-வது பெரிய சமையல் காஸ் (எல்பிஜி) நுகர்வு செய்யும் நாடாகும். இதில் 90 சதவீத எரிவாயு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர்ப் பதற்றம் காரணமாக, இந்த கடல் வழிப் பாதையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மேற்கு ஆசியப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் மத்தியில் ஒருவித தேவையற்ற அச்சம் நிலவுகிறது. இதனால் வழக்கத்தைவிட கூடுதலாக 88 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் சமையல் காஸ் விநியோகம் கவலைக்குரிய ஒரு விஷயமாக உள்ளது. இருப்பினும், எந்த விநியோக மையத்திலும் இருப்பு தீர்ந்துவிடவில்லை. எனவே, தேவைப்படும் போது மட்டும் பொதுமக்கள் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
எண்ணெய் நிறுவனங்களிடம் கச்சா எண்ணெய் இருப்பு போதுமான அளவில் உள்ளது. இதனால் பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது.
வர்த்தக சிலிண்டர் விநியோகம் குறித்த முடிவுகள் அந்தந்த மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து எடுக்கப்படும். சிலிண்டர்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்கத் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மார்ச் 13-ம் தேதி மட்டும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் 1,300-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனைகளை நடத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.