சத்ரபதி சம்பாஜிநகர்: “உலகின் எந்த வல்லரசும் இந்தியா முன்னேறுவதை விரும்புவதில்லை. ஆனால், இந்தியாவை வெறுக்கும் நாடுகளுக்குக் கூட உதவ இந்தியா தயாராக உள்ளது” என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் 5-வது ‘பத்மா’ திருவிழாவின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஞானயக்ஞா அறக்கட்டளை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பத்ம விருது பெற்றவர்கள் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடுகின்றனர். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: உலகம் தற்போது விசித்திரமான சூழ்நிலையில் உள்ளது. உலகின் எந்த வல்லரசும் இந்தியா முன்னேறுவதை விரும்புவதில்லை. அனைவரையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே அவை முயற்சிக்கின்றன.
இந்தியா வளர்ச்சியடைந்தால், அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற அதன் கொள்கையால், இந்த வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடும். இந்தியாவை வெறுக்கும் நாடுகளுக்குக்கூட தேவைப்படும் நேரத்தில் இந்தியா உதவி வருகிறது. மாலத்தீவு நெருக்கடியில் இருந்தபோது இந்தியா குடிநீர் வழங்கியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு நிதியுதவி அளித்தது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை நேபாளம் எதிர்கொள்ளும்போது இந்தியா உதவுகிறது. வங்கதேசத்துக்கும் உதவி வருகிறது. பாகிஸ்தானில் வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டபோதுகூட இந்தியா உதவி செய்துள்ளது. பலவீனமானவர்களைப் பாதுகாப்பதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும்தான் அதிகாரத்தின் உண்மையான பலம் உள்ளது என்று இந்தியா நம்புகிறது. இது தான் இந்தியாவின் தனித்துவம். இன்றைய இளைஞர்கள் அடிமைத்தனத்தின் தாக்கங்களிலிருந்து விடுபட்டவர்களாக உள்ளனர். ஒருவர் உண்மையாகப் பேசினால், அவருக்குப் பின்னால் அணிவகுக்க இளைஞர்கள் தயாராக உள்ளனர். அவர்கள் பொய்களை வெறுக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.