மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
புதுடெல்லி: ‘‘இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த ஒப்பந்தம் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டதாக இருக்கும்’’ என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வந்தது. இந்த வரி 18 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இரு நாடுகளிடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளும் நிறைவான பலன்களை பெறும். குறிப்பாக இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிக பலன் அடைவார்கள்.
புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்திய வைரம், நகைகள், ஸ்மார்ட்போன்கள், மின்னணுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு முழுமையான வரிவிலக்கை அளிக்கும். இதன்மூலம் இந்திய தொழில் துறை அபார வளர்ச்சி அடையும். அமெரிக்காவுக்கான ஸ்மார்ட்போன்கள், மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும். இதேபோல மளிகைப் பொருட்கள், தேநீர், காபி, தேங்காய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கு அமெரிக்க அரசு வரிவிலக்கை அளிக்கும். இதனால் இந்திய விவசாயிகள் மிகுந்த பலன் அடைவார்கள்.
அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட வேளாண் விளைபொருட்கள் இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி வழங்கவில்லை. அமெரிக்காவின் சோளம், அரிசி, கோதுமை, ராகி, தானியங்களை இந்தியாவில் விற்பனை செய்ய எவ்வித சலுகையும் வழங்கவில்லை. இந்தியாவில் வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம், கொய்யா, காளான், கோகோ, கடுகு எண்ணெய், அன்னாசி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். இந்தியாவில் இறைச்சி, கோழி இறைச்சி, பால் பொருட்கள், சோயோபீன், சர்க்கரை, தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சிறிய பாதிப்பு கூட ஏற்படாது. இந்தியாவில் எத்தனால், புகையிலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது.
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள், குறு, சிறு தொழில் துறை, கைத்தறி, கைவினைத் துறைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த துறைகளின் நலன்கள் பாதுகாக்கப்படும். இந்தியாவின் விமான உதிரி பாகங்கள் உற்பத்தி துறை, இயந்திரவியல் பொருட்கள் உற்பத்தி துறை, மருந்து உற்பத்தி துறை அதிகப் பலன்களைப் பெறும்.
பிளாட்டினம், கடிகாரம், கைக் கடிகாரம், எண்ணெய் வகைகள், அலங்காரப் பொருட்கள், ரசாயனப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு வரி விலக்கு அளித்துள்ளது. இதேபோல பல்வேறு இந்திய வேளாண் விளைபொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்திய தொழில் துறை, இந்திய விவசாயிகள் நிறைவான பலன் அடைவார்கள்.
வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த லட்சியத்தை எட்ட அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஊக்கம் அளிக்கும். புதிய ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்ய உள்ளன. புதுமை கண்டுபிடிப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன. இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த ஒப்பந்தம் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டறிக்கை: இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து நேற்று வெளியிட்கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 13-ம் தேதி இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசினர். அப்போது இரு நாடுகள் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 18 சதவீத வரி விதிக்கும். அமெரிக்காவின் இயந்திரவியல் சாதனங்கள், உணவு வகைகள், வேளாண் விளைபொருட்களுக்கு இந்திய அரசு வரிவிலக்கு அளிக்கும் அல்லது வரியைக் குறைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமலுக்கு வந்தது 25% கூடுதல் வரி ரத்து: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான நிர்வாக உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டு உள்ளார். இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை வலுப்படுத்தும்: பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை சாத்தியமாக்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையே ஆழமான நட்புறவு, நம்பிக்கை நீடிக்கிறது. இந்த நம்பிக்கையை இரு நாடுகள் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை வலுப்படுத்தும். விவசாயிகள், தொழில் முனைவோர், குறு, சிறு தொழில் துறை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும். இருதரப்பு ஒப்பந்தத்தால் இந்தியாவில் பெண்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகும்.
புதுமை கண்டுபிடிப்புகள், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும். உலகத்தின் வளர்ச்சிக்கு இரு நாடுகளும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கும். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற லட்சியத்தை நோக்கி அதிவேகமாக முன்னேறி செல்கிறோம். இந்த நேரத்தில் இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவு இரு நாடுகளின் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் மிகுந்த பலன் அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.