மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தின் ராய்ப்பூர் கிராமத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரச்சாரத்துக்கு சென்றார். அப்போது பெண்கள் அவருக்கு கும்ப மரியாதை செலுத்தினர். படம்: பிடிஐ
புருலியா: மேற்குவங்கத்தில் அடுத்த மாதம் 23, 29-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், புருலியா தொகுதியில் நேற்று தடாலடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முதல்வர் மம்தா பானர்ஜி. அப்போது அவர் கூறியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்தால் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கும். மக்கள் சாப்பிட கறி, கோழி, மீன் எதுவும் கடையில் கிடைக்காது.
அவர்களுக்கு மக்களின் மதம், கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அவர்கள் வன்முறையில் ஈடுபடுவர், ஆதிவாசி மக்களை மோசம் செய்வர். பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் தாக்கப்படுகின்றனர். பாஜக மூத்த தலைவர் ஒருவர் (அமித் ஷா) நமக்கு எதிராக ‘குற்றப்பத்திரிகை’ வெளியிட்டுள்ளார். குஜராத்தில் பல வன்முறைகளில் ஈடுபட்ட அவர்களுக்கு எதிராகத்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
திரிணமூல் கட்சியின் லக்ஷ்மிர் பந்தர் திட்டத்தால் பெண்கள் பயனடைந்துள்னர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் 1.2 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. நமது ஆதரவாளர்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
என்னுடன் பணியாற்றிய அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் மாற்றி அவமானப்படுத்தியுள்ளது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.