இந்தியா

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்

ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வர எதிர்க்​கட்​சிகள் சார்​பில் நேற்று நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டது.

கடந்த 2-ம் தேதி மக்​களவை​யில் குடியரசுத் தலை​வரின் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதம் தொடங்​கியது. அப்​போது முன்​னாள் ராணுவ தளபதி நரவனே​எழுதியுள்ள வெளிவ​ராத புத்​தகத்தை மேற்​கோள் காட்​டி, சீன எல்​லைப் பிரச்​சினை குறித்து பேச எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் முயன்​றார். அவருக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​டது.

          

இதன் ​காரண​மாக மக்​களவை, மாநிலங்​களவையை எதிர்க்​கட்​சிகள் முடக்கி வரு​கின்​றன. இந்த விவ​காரம் தொடர்​பாக மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டுவர எதிர்க்​கட்​சிகள் நேற்று நோட்​டீஸ் வழங்கின. இதில் காங்​கிரஸ், திமுக,

சமாஜ்​வா​தி, ஆர்ஜேடி, கம்யூனிஸ்ட் கட்​சிகளை சேர்ந்த 118 எம்​.பி.க்​கள் கையெழுத்​திட்டுள்​ளனர். திரிண​மூல் காங்​கிரஸ் எம்.​பி.க்​கள் நோட்​டீஸில் கையெழுத்​திட​வில்​லை. எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யும் நோட்​டீஸில் கையெழுத்​திட​வில்​லை.

காங்​கிரஸ் கொறடா கே.சுரேஷ், மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​விடம் நேரடி​யாக நோட்​டீஸை வழங்​கி​னார். இந்த நோட்​டீஸை ஆய்வு செய்​து விரைந்து நடவடிக்கை எடுக்​கு​மாறு மக்​களவை செய​லா​ளர் உத்​பல் குமார் சிங்​குக்கு சபா​நாயகர் உத்​தர​விட்​டார்.

எதிர்க்​கட்​சிகள் வழங்​கிய நோட்​டீஸில் கூறி​யிருப்​ப​தாவது: அரசி​யலமைப்பு சட்​டம் பிரிவு 94 (சி)-ன் படி சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கோரி நோட்​டீஸ் வழங்​கு​கிறோம். சபா​நாயகர் ஒருதலைப்​பட்​ச​மாக செயல்படு​கிறார். அவை​யில் எதிர்க்​கட்சித் தலை​வர்​கள் பேசுவதற்கு அனு​மதி மறுக்​கப்​படு​கிறது.

கடந்த 2-ம் தேதி குடியரசுத் தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதத்​தின் ​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி அவை​யில் பேச அனு​மதி மறுக்​கப்​பட்​டது. இதே​போல பலமுறை எதிர்க்​கட்சி தலை​வர் அவை​யில் பேச அனு​மதி மறுக்​கப்​பட்டுள்​ளது.

கடந்த 3-ம் தேதி எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்​கள் ஜனநாயக முறை​யில் அவை​யில் போராடினர். ஆனால் அவர்​கள் பட்​ஜெட் தொடர் முழு​வதும் இடைநீக்​கம் செய்​யப்​பட்டுள்​ளனர். கடந்த 4-ம் தேதி பாஜகவை சேர்ந்த எம்.​பி. ஒருவர், 2 முன்​னாள் பிரதமர்​கள் குறித்து மக்​களவை​யில் அவதூறாக பேசி​னார். அந்த எம்.பி. அவை​யில் அடிக்​கடி அநாகரி​க​மாக பேசி வரு​கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

கடந்த 5-ம் தேதி மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா, காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் மீது அபாண்​ட​மான பொய் குற்​றச்​சாட்​டு​களைச் சுமத்​தி​னார். இது நாடாளு​மன்ற விதி​களுக்கு எதி​ரானது. சபா​நாயகர் தனது பதவிக்​கான கண்​ணி​யத்தை காப்​பாற்​ற​வில்​லை. இவ்​வாறு நோட்​டீஸில் தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.

இதுகுறித்து காங்​கிரஸ் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சீன எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக மக்​களவை​யில் பேச ராகுல் காந்​திக்கு அனு​மதி மறுக்​கப்​படு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் கடந்த திங்​கள்​கிழமை ஆலோ​சனை நடத்​தினர். இதில் சபா​நாயகருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வர முடிவு செய்​யப்​பட்​டது.

நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வர 14 நாட்​களுக்கு முன்​பாகவே நோட்​டீஸ் வழங்க வேண்​டும். எனவே, சபா​நாயகர் ஓம் பிர்​லா​விடம் செவ்​வாய்க்​கிழமை நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டது. பட்​ஜெட் கூட்​டத்​தொடரின் முதல் அமர்வு பிப்​ர​வரி 13-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. இரண்​டாம் அமர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்​ரல் 2-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இரண்​டாவது அமர்​வில் சபா​நாயருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் அவை​யில் கொண்டு வரப்​படும்.

மக்​களவை​யின் மரபு, மாண்பை கருதி நம்​பிக்​கை​யில்லா தீர்​மான நோட்​டீஸில் எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கையெழுத்​திட​வில்​லை. சபா​நாயகரிடம் முதலில் ஒரு நோட்​டீஸை வழங்​கினோம். அதில் சில தவறுகள் திருத்​தப்​பட்டு மீண்​டும் நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டது.

இந்த நோட்​டீஸ் குறித்து பல்​வேறு கட்ட பரிசீலனை​கள் நடை​பெறும். 14 நாட்​கள் கழித்து நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் அவைக்கு கொண்டு வரப்​படும். அப்​போது தீர்​மானத்​துக்கு

ஆதரவு தெரி​விப்​பவர்​கள் எழுந்து நிற்​கு​மாறு சபா​நாயகர் கூறு​வார். 50 எம்.​பி.க்​கள் எழுந்து நின்று தீர்​மானத்​துக்கு ஆதரவு தெரி​வித்​தால், மார்ச் 9-ம் தேதி அவை​யில் விவாதம் நடத்​தப்​பட்​டு, இறு​தி​யில் வாக்​கெடுப்பு நடத்​தப்​படும். இவ்​வாறு காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

திரிணமூல் விளக்கம்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறும்போது, “மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளோம். அவர் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாங்களும் கையெழுத் திடுவோம்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மக்களவை வட்டாரங்கள் கூறும்போது, “சபாநாயகர் ஓம் பிர்லா மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. எனவே, செவ்வாய்க்கிழமை முதல் மக்களவைக்கு செல்வதை அவர் தவிர்த்து உள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகே அவர் அவைக்குச் செல்வார்" என்று தெரிவித்தன.

போதிய எம்.பி.க்கள் இல்லாததால் தோல்​வியடை​யும்: கடந்த 1954-ம் ஆண்​டில் அப்​போதைய மக்​களவை சபா​நாயகர் மலவாங்​குக்கு எதி​ராக எதிர்க்​கட்​சிகள் நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வந்​தன. கடந்த 1966-ம் ஆண்​டில் அப்​போதைய மக்​களவை சபா​நாயகர் ஹுக்​கும் சிங், கடந்த 1987-ம் ஆண்​டில் அன்​றைய மக்​களவை சபா​நாயகர் பல்​ராம் ஜாக்​கருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானங்கள் கொண்டு வரப்​பட்​டன. மூன்று முறை​யும் நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் தோல்வி அடைந்​தது.

தற்​போது 4-வது முறை​யாக மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டிருக்​கிறது. இந்த மசோ​தாவை நிறைவேற்ற அவை​யில் உள்ள எம்​.பி.க்​களில் 50 சதவீத எம்.​பி.க்​களின் ஆதரவு தேவை.

மக்​களவை​யின் மொத்த எம்​.பி.க்​கள் எண்​ணிக்கை 543. உதா​ரணத்துக்கு அவை​யில் 10 எம்​.பி.க்​கள் இல்​லாமல் 533 எம்.​பி.க்​கள் இருந்​தால் நம்​பிக்​கை​யில்லா தீர்​மானத்தை நிறைவேற்ற 267 எம்.​பி.க்​களின் ஆதரவு தேவை.

மக்​களவை​யில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 293 எம்.​பி.க்​கள் உள்​ளனர். காங்​கிரஸ், தி​முக உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய இண்​டியா கூட்​ட​ணிக்கு 238 எம்​.பி.க்​களின் பலமே உள்​ளது. எனவே, சபா​நாயகருக்​கு எதி​ரான நம்​பிக்​கை​யில்​லா தீர்​மானம்​ தோல்​வி அடைவது உறு​தி என்​று அரசி​யல்​ நோக்​கர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT