புதுடெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த மாநிலத்தை ஜாங்னான் என்றும் சீனா குறிப்பிட்டு வருகிறது.
சீனாவின் இத்தகைய போக்குக்கு மத்திய அரசு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, அருணாச்சல பிரதேசத்தின் 27 இடங்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ வரைபடத்தை இந்தியா அண்மையில் வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் நமது ராணுவ வீரர்கள் ரோந்து, கண்காணிப்புப் பணிக்குச் சென்றபோது சீன ராணுவம் தடுத்து நிறுத்தியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறும்போது, “அருணாச்சலின் பல இடங்களில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து சென்றபோது அவர்களை சீன ராணுவ அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக பதில் அளிக்காமல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாய்மூடி மவுனமாக உள்ளார்” என்றார். இதையடுத்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: அருணாச்சல பிரதேசத்தில் கால்நடை மேய்ச்சல் குறித்து அங்கு வசிக்கும் உள்ளூர் மக்களின் கவலைகள் அனைத்தும் நியாயமானவையே. அந்தப் பகுதி மக்களின் உணர்வுகள் அனைத்தும் மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும். ஆனால், அண்மையில் அங்கு சீனாவின் எந்த புதிய ஆக்கிரமிப்பும் நடைபெறவில்லை. இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.