புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து 10-ம் தேதி அந்த மைதானத்தில் வலதுசாரி அமைப்பினர் மற்றும் பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் ‘சுத்திகரிப்பு’ (புனிதப்படுத்தும்) சடங்குகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டாவுக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: ஹல்த்வானியில் நடைபெற்ற சம்பவத்தை நாடாளுமன்றத்தில் நான் கூறியபோது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தீர்கள்.
ஆனால் சம்பவம் நடந்து 24 நாட்கள் கடந்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) கூட பதிவு செய்யப்படவில்லை. இந்த சுத்திகரிப்பு நடைமுறை நேரடியாக தீண்டாமையுடன் தொடர்புடையது.
இதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரகாண்ட் முதல்வருக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரத்தில் மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.