பாட்னா: கடந்த 15-ம் தேதி ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கியபோது இஸ்லாமிய பெண் மருத்துவரான நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாபை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் விலக்கினார். இது சர்ச்சையான நிலையில், அந்த பெண் மருத்துவர் அரசு பணியில் இதுவரை சேரவில்லை. சனிக்கிழமைதான் பணியில் இணைவதற்கான கடைசி நாள் என்ற சூழலில் அவர் பணிக்கு வரவில்லை.
அவர் சாபல்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி பெற்றிருந்தார். மாவட்ட மருத்துவர் அவினாஷ் குமார் சிங் இடம் தான் பணியில் சேர்ந்தது குறித்து தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், நுஸ்ரத் பர்வீன் அதை செய்யவில்லை.
“மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் பணியில் சேர சனிக்கிழமை மாலை 6 மணி வரை அவகாசம் இருந்தது. ஆனால், அவர் பணிக்கு வரவில்லை. இதன் காரணமாக அவர் இந்த பணியில் சேர முடியாது என்று இல்லை. அவர் பிறகு கூட பணியில் சேரலாம். அதற்கு சுகாதாரத்துறை அனுமதி வேண்டும்” என்று மருத்துவர் அவினாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதே நேரத்தில் அந்த பெண் மருத்துவர் பணிக்கு வரவில்லை என்றால் நரகத்துக்கு செல்லட்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
இதற்கு மத்தியில் ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் இர்பான் அன்சாரி, மருத்துவர் பர்வீனுக்கு மாதம் ரூ.3 லட்சம் ஊதியத்துடன் அரசு பணி வழங்குவதாக அறிவித்தார். இதை ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.