மதனப்பள்ளி: ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்துள்ள, அன்னமைய்யா மாவட்டம், மதனப்பள்ளியில் ரூ.1 லட்சம் கோடி செலவில் சர்வதேச தோட்டக்கலை மையம் மற்றும் இந்திய வேளாண்மைப் பள்ளி அமைக்கப்பட உள்ளது. இந்த 2 முக்கிய திட்டங்களுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.
இந்நிகழ்ச்சியில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், ஆந்திர அமைச்சர்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆனந்த் அம்பானி உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “மத்திய அரசின் உதவியுடன் ரூ.40 ஆயிரம் கோடி, தனியார் முதலீடு மூலம் ரூ.60 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.1 லட்சம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிராமங்களே தேசத்திற்கு முதுகெலும்பு என கூறிய மகாத்மா காந்தியின் கனவு நனவாக அவரது பிறந்த நாளில் இத்திட்டத்தை தொடங்குகிறோம். இத்திட்டத்தின் மூலம் 5,860 கிராமங்களில் 201 மையங்கள் அமைத்து தோட்டக்கலை துறையை வளர்ச்சி அடைய செய்ய உள்ளோம்.
இதன் மூலம் 6 லட்சம் ஏக்கர் பழ உற்பத்தி மாநிலத்தில் அதிகரிக்கும். ஒரு பெண்ணால் தான் வீட்டை சரிவர பராமரிக்க இயலும். அதுபோல் நமது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நமது நாட்டின் வருவாயை, நிதியை சரிவர பராமரித்து வருகிறார். அவர் இன்றைய காலத்தின் இரும்பு பெண் ஆவார்” என்றார்.
நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “ஆந்திராவின் ராயலசீமா மாவட்டங்கள் புதிய முகங்களாக மாறப் போகிறது. உரம் ஒரு மூட்டை சர்வதேச மார்க்கெட்டின் நிலவரப்படி ரூ.3000 ஆகும். ஆனால், மானிய விலைப்படி இதனை ரூ.300க்கே விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். கோபர்த்தன் திட்டம் மூலம் சோலார் பம்பு செட் வழங்கி வருகிறோம். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க கிசான் இன்ஸூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்” என்றார்.