இந்தியா

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் என்ஐஏ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்!

வெற்றி மயிலோன்

ஜம்மு காஷ்மீர்: பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை இன்று (டிசம்பர் 15) ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகளுக்கு நேரடித் தொடர்பு இருந்ததை என்ஐஏ விசாரணைகள் கண்டறிந்தன. அந்த தீவிரவாதிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த 3 தீவிரவாதிகளும் ஜூலை மாதம் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். அந்த பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக ஜூன் மாதம் இரண்டு பேரை என்ஐஏ கைது செய்தது.

அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பட்கோட்டைச் சேர்ந்த பர்வேஸ் அகமது ஜோதர் மற்றும் பஹல்காமைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் ஆகியோர், அந்த மூன்று தீவிரவாதிகளும் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் நாட்டினர் என்பதை அடையாளம் காட்டினர்.

கைதான அந்த இரண்டு பேரும் பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் தளவாட உதவிகளை வழங்கியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு டச்சிகாம்-ஹர்வன் வனப்பகுதியில் மறைந்திருந்த அந்த 3 தீவிரவாதிகளும், ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் ஜூலை 28 அன்று 'ஆபரேஷன் மகாதேவ்' என்ற பெயரில் நடந்த மோதலில் கொல்லப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ஆயுதப் படைகள் மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்துர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது துல்லிய தாக்குதல்களை நடத்தின.

இந்தத் தாக்குதல், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளின் தலைமையகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உட்பட 9 இடங்களைத் குறிவைத்தது. இந்த இடங்களிலிருந்துதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன.

இந்தச் சூழலில், தேசிய புலனாய்வு முகமை இன்று (டிசம்பர் 15) ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT