ஸ்ரீநகர்: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த மாதம் 10-ம் தேதி கார் குண்டு வெடித்தது. இந்த காரை ஓட்டிய மருத்துவர் உமர் நபி உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு முன்பு மருத்துவர்கள் ஆதில் அகமது ரத்தர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் ஷாஹித் ஆகியோர் காஷ்மீர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். குண்டு வெடித்தவுடன் அமிர் ரஷித் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கைதான 4 பேரும் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டனர். டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் மேலும் 3 மருத்துவர்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். குறிப்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மருத்துவர் ஆதில் அகமது ரத்தர் (குல்காம்), முஜம்மில் ஷகில் (புல்வாமா மாவட்டம் கோயில் கிராமம்), மத போதகர் முப்தி இர்பான் அகமது வாகே (சோபியான்) மற்றும் அமிர் ரஷித் (புல்வாமாவின் சம்பூரா கிராமம்) ஆகியோரின் வீடுகளில் தனித்தனி குழுக்கள் சோதனை நடத்தின. இதுதவிர மேலும் சில இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.