பெங்களூரு: இண்டிகோ விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் புதுமண ஜோடி திருமண வரவேற்பில் ஆன்லைன் மூலம் கலந்துகொண்டது வைரலானது.
பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் மேதா சாகருக்கும் (29) ஒடிசாவின் புவனேஸ்வரை சேர்ந்த சங்கமா தாஸ் (26) என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் 23-ம் தேதி புவனேஸ்வரில் திருமணம் நடைபெற்றது. கடந்த 3-ம் தேதி கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் புதுமண தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக மேதா சாகரும் சங்கமா தாஸும் கடந்த 2-ம் தேதி புவனேஸ்வரில் இருந்து பெங்களூரு வழியாக ஹுப்பள்ளி செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்தனர். முதலில் விமானம் 6 மணி நேரம் தாமதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் புதுமண ஜோடியால் திட்டமிட்டபடி ஹுப்பள்ளிக்கு செல்ல முடியவில்லை.
இருப்பினும் அங்குள்ள உறவினர்களும், நண்பர்களும் மண்டபத்தில் குவிந்தனர். இதையடுத்து மணமகனின் தந்தை சேகர் தாஸ் சாகர், புதுமண ஜோடிகளை ஆன்லைன் மூலமாக திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு கூறினார். உடனடியாக மண்டபத்தில் பெரிய அளவில் 2 திரைகள் அமைக்கப்பட்டு, ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் மூலம் புதுமண ஜோடிகள் தங்களின் திருமண வரவேற்பில் புத்தாடை அணிந்து பங்கேற்றனர்.
மணமக்களுக்காக போடப்பட்டிருந்த இருக்கைகளில் அவர்களது பெற்றோர் அமர்ந்து சடங்குகளைச் செய்தனர். இதை தொடர்ந்து மணமக்களை உறவினர்களும், நண்பர்களும் ஆன்லைன் மூலமாக வாழ்த்தினர்.
திரையில் தோன்றிய மணமக்களுடன் உறவினர்கள் நின்றவாறு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். ஜிபே, ஃபோன் பே போன்ற செயலிகள் மூலமாக மொய் பணம் அனுப்பியதுடன், இன்ஸ்டாமார்ட், பிளிங்க்ட் இன் போன்ற செயலிகள் மூலம் பரிசு பொருட்களை ஆர்டர் செய்து அனுப்பினர். இந்த திருமண வரவேற்பின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகியுள்ளன.