கோப்புப்படம்
புதுடெல்லி: பாஜகவில் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு அளித்து புதிய அணிகள் அமைக்கப்பட உள்ளன.
மகளிர் மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்று பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், கட்சி மற்றும் ஆட்சியில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசியத் தலைவர் நிதின் நவீன் தலைமையில் 33 சதவீத மகளிர் ஒதுக்கீட்டுடன் கட்சி நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதேபோல் பாஜக ஆளும் மாநில அமைச்சரவையிலும் மகளிருக்கான ஒதுக்கீட்டை அமலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜகவின் தேசிய நிர்வாக வட்டாரங்கள் கூறுகையில், ‘‘கட்சித் தலைவர் நிதின் நவீன் தலைமையிலான புதிய அணி மூலம் பாஜகவின் கனவு நிறைவேறுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு முன்னுதாரணமாக மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. கட்சியின் புதிய செயற்குழுவில் சிறப்பு கவனம் செலுத்தி அதிக எண்ணிக்கையில் மகளிரை நிர்வாகத்தில் சேர்க்க உள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சரவை மற்றும் இதர கட்சி பொறுப்புகளிலும் 33 சதவீத ஒதுக்கீடு பின்பற்றப்படும். இதன்மூலம், பாஜகவில் சேர அதிக எண்ணிக்கையில் மகளிர் முன்வரும் வாய்ப்புகள் உள்ளன’’ என்று தெரிவித்தன.
ஜே.பி.நட்டாவுக்குப் பிறகு பாஜக தலைவர் பொறுப்பேற்ற நிதின் நவீன், 5 மாதங்கள் கடந்த பின்னரும் தனது அணியை அமைக்கவில்லை. இந்நிலையில், அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் தலைவர்கள் என இரு தரப்பினரும் இடம்பெறும் சமச்சீரான குழு நிதின் நவீன் தலைமையில் உருவாக்கப்பட உள்ளது. இதில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது.