பிரதிநிதித்துவப்படம்
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் புதிய சர்வதேச விமான நிலையம் உருவாகிறது. பிராங்க்பர்ட் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள நகரங்களின் தொழில் வளரச்சி அமைப்பான ‘ரைன் மெயின் இன்னவேஷன் அமைப்பு’ மற்றும் தமிழர்களின் ‘ஜெர்மன் - இந்தியன் பிஸினஸ் அலையன்ஸுடன்(ஜிஐபிஏ)’ உ.பி. அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில், ஆசியாவிலேயே மிகப்பெரியதாக சர்வதேச விமான நிலையம் உருவாகிறது. இது ஐரோப்பாவின் நுழைவு வாயிலாக விளங்கப் போகிறது.
இந்த சர்வதேச விமான நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும்போது ஆண்டுக்கு 7 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். தொழில் துறையினரைப் பெருமளவில் ஈர்க்கும் விதமாக, விமான நிலையத்தைச் சுற்றி தொழில் மற்றும் தளவாடங்களை மையமாகக் கொண்ட தொகுப்புகள் (கிளஸ்டர்கள்) உருவாக்கப்படுகின்றன.
வளர்ந்து வரும் இந்த விமான மற்றும் தொழில்துறை தடத்தில் பிராங்க்பர்ட் விமான நிலைய பிராந்தியத்தை அதன் தொழில்துறை மையங்களான ரஸல்ஷீம், ரவுன்ஹைம் மற்றும் கெல்ஸ்டெர்பாக் ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி சரக்கு விமானம் மற்றும் விநியோக சங்கிலி தீர்வுகள், இயந்திர பொறியியல் மற்றும் விமான நிலைய தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஜிஐபிஏவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 3 மாதங்களுக்குள் ஒரு கட்டமைக்கப்பட்ட செயல் திட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்படும். இது தொடர்பாக ஏற்கெனவே பிரதிநிதிகள், துறை சார்ந்த முயற்சிகள் மற்றும் முதலீட்டாளர்கள் என பல அம்சங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஜிஐபிஏவானது ஜெர்மனி - இந்திய பொருளாதார பிராந்தியங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை செயல்படுத்துவதற்கு தேவையான உதவிகளை அளிக்கும்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜெர்மனிவாழ் தமிழரும் ஜிஐபிஏவின் இணை நிறுவனருமான நிர்மல் கண்ணையன் கூறுகையில், ‘‘நொய்டாவின் ஜேவரில் சர்வதேச விமான நிலையம் அமையும் பகுதி, இந்தியாவின் உலகளாவிய தொழில்துறையின் அடித்தளமாக மாறி வருகிறது. உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் இந்த முன்னேற்றங்களை முன்கூட்டியே புரிந்து கொண்டு நிறுவன ரீதியாக செயல்பட வேண்டும். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் பிராந்தியம் இந்த சூழலில் ஒரு மத்திய ஐரோப்பிய நாடுகளின் பொறுப்பை ஏற்க தொழில்துறை மற்றும் தளவாட நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது.
உ.பி. அரசுடன் நாங்கள் முதல் முறையாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இது பிராங்க்பர்ட் பிராந்தியத்துக்கும் வட இந்தியாவின் புதிய சர்வதேச விமான நிலையத்தால் இயக்கப்படும் தொழில்துறை அமைப்புகளுக்கும் இடையிலான நேரடி பொருளாதார இணைப்புக்கான அடித்தள கட்டமைப்பை வழங்கும்’’ என்றார்.