இந்தியா

மதுபான ஒப்பந்த மோதல் முதல் பழிக்குப்பழி கொலை வரை: ராஜஸ்தானில் புதிய கேங்ஸ்டர் கலாச்சாரம்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: பழிவாங்கும் நோக்கில் ஜெய்ப்பூரில் ஒருவர் கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ராஜஸ்தானில் வளர்ந்து வரும் எண் அடையாளக் கேங்ஸ்டர் கலாச்சாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இது தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் கர்தானி பகுதியைச் சேர்ந்த விஜய் பாஜியா, புதன்கிழமை ஜெகதம்பா நகரில் வெட்டிக் கொல்லப்பட்டார். 2019-ல் கொல்லப்பட்ட கைலாஷின் 21 வயது மகன் ஹனிஷ் கோல்யா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தக் கொலைவெறித் தாக்குதலை நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். பொறியியல் படித்த ஹனிஷ், தந்தையின் கொலைக்குப் பழிவாங்க பல ஆண்டுகளாக திட்டமிட்டு வந்துள்ளார்.

மதுபான ஒப்பந்தங்கள் தொடர்பான கும்பல் மோதலில் கைலாஷுக்கும் விஜய்க்கும் பகை இருந்தது. இருவருக்கும் இடையிலான தகராறாகத் தொடங்கிய இது, குடும்பத்தினரையும் கூட்டாளிகளையும் இழுத்து, பல ஆண்டுகள் நீடித்த கசப்பான பகையாக மாறியது.

கைது செய்யப்பட்ட ஹனிஷும் அவரது கூட்டாளிகளும் 7007 கும்பலைச் சேர்ந்தவர்கள். அவர்களின் கைகளில் ‘7007’ என பச்சை குத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட விஜய், 1507 என்ற போட்டிக் கும்பலை நடத்தி வந்துள்ளார்.

விஜய் தனது பிறந்த தேதியை வைத்து 1507 என தனது கும்பலுக்கு பெயரிட்டுள்ளார். 7007 கும்பலின் முதல் உறுப்பினரின் வாகனப் பதிவு எண்ணே அதன் பெயராக அமைந்தது. பின்னர் மற்றவர்களும் அதே எண் கொண்ட வாகனங்களை வாங்கி, கும்பலின் அடையாளத்தைப் பரப்பினர்.

முன்பு குறிப்பிட்ட நகரங்களின் வட்டார போக்குவரத்து அலுவலக (ஆர்டிஓ) பதிவு எண்களான RJ19, RJ07 என இயங்கிய கேங்ஸ்டர்கள், தற்போது ஒரே நகருக்குள் பல குழுக்கள் உருவானதால் 4 இலக்க எண்களைத் தங்கள் கேங் அடையாளமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT