காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா
புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரோடு சாம் பிட்ரோடா இணைந்து பணியாற்றி உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் குரு என்றும் வர்ணிக்கப்பட்டார். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சாம் பிட்ரோடா இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவராகப் பதவி வகிக்கிறார்.
சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி அன்பானவர், கடின உழைப்பாளி. கொள்கை ரீதியாக அவருக்கும் எனக்கும் வேறுபாடுகள் உள்ளன. தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் போன் ஒட்டுக் கேட்பு புகார் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு சாம் பிட்ரோடா நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தனது போனை பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுக் கேட்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இதை நான் நம்பவில்லை. பிரதமர் மோடி அவ்வாறு செய்வதில்லை. எனது போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது. லேப்டாப் மூலமான தகவல் பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படுகிறது. எனது வங்கிக் கணக்குகள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளன.
இதுதொடர்பாக சைபர் பாதுகாப்பு நிபுணர்களுடன் கலந்தாலோசித்தேன். எனது போன் ஒட்டு கேட்கப்படுவதை அவர்கள் உறுதி செய்தனர். யாரோ ஒருவர் எனது போனை ஒட்டுக் கேட்கிறார். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து நான் கவலைப்படுவது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் கூறும்போது, “எனது போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் எனது போனில் உள்ளன. இது பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும். அவர்தான் எனது போனை ஒட்டுக் கேட்கிறார்” என்று குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா மறுத்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.