புதுடெல்லி: உத்தர பிரதேச சன்னி மற்றும் ஷியா வக்பு வாரியங்களின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, அதன் நிர்வாகிகளாக, உயர் கல்வி பெற்ற முஸ்லிம்களும், முத்தவல்லிக்கு பட்டப்படிப்பும் அவசியமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, ‘ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு மற்றும் வளர்ச்சிச் சட்டம்,1995’-ஐ அமல்படுத்தியது. இதனைச் செயல்படுத்தத் தேவையான விதிகளை உருவாக்குமாறுமாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. பல வருடங்களாக எந்த மாநிலமும் கண்டுகொள்ளாத இச்சட்டத்தை நாட்டின் முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் அமலாக்கி உள்ளது.
உத்தர பிரதேச அமைச்சரவை, வக்பு நிர்வாக விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இனி, வக்பு சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பு, உயர்கல்வி பெற்ற முஸ்லிம் நபர்களிடம் இருக்கும்படி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ‘உத்தர பிரதேச ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு மற்றும் வளர்ச்சி விதிகள், 2026’ என்ற சட்டதிருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, இனி மசூதிகளின் ‘முத்தவல்லி’ (நிர்வாகி) ஆக வேண்டுமானால், பட்டப்படிப்பு அவசியம். இத்துடன், இந்தி மற்றும் உருது மொழிகளில் அறிவு பெற்றிருப்பது கட்டாயம். இப்பதவியில் ஒருவரை நியமிக்கும் முன், மாவட்ட ஆட்சியரால் விண்ணப்பதாரரின் ஆவணங்கள், தகுதி மற்றும் நடத்தை சரிபார்க்கப்பட உள்ளன. இந்த நடைமுறை தொடங்கிய 45 நாட்களுக்குள், மாவட்ட ஆட்சியர் இதுகுறித்த அறிக்கையை சன்னி மற்றும் ஷியா மத்திய வக்பு வாரியங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய விதிகளின்படி, முத்தவல்லிகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1-ம் தேதிக்குள், அடுத்த நிதியாண்டுக்கான வருமானம், செலவு மதிப்பீட்டு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அறிவிப்புகள், உத்தரவுகள், சொத்து மேலாண்மைத் திட்டங்கள், மற்றும் சன்னி மற்றும் ஷியா வக்பு வாரியங்களின் ஆண்டு வரவு-செலவுத் திட்டங்கள் ஆகியவையும் இந்த இணையதளத்தில் இடம்பெறும்.
குடும்ப வக்புகளுக்கு, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை பொருந்தாது. முத்தவல்லி பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான குறைந்தபட்ச வயது 21். ஏதேனும் ஒரு குற்றத்துக்காக 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை பெற்றவர்கள் தகுதியற்றவர்கள்.
வக்பு சொத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததற்காகத் தண்டிக்கப்பட்டவர்கள், அல்லது ஊழல் அல்லது முறையற்ற நடத்தை காரணமாக முத்தவல்லி பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இந்தப் பதவிக்குத் தகுதியற்றவர்கள் ஆவர்.
சன்னி மற்றும் ஷியா வக்பு வாரியங்களின் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு, மாநில அரசின் சிறப்புச் செயலர் அல்லது அதற்கு இணையான அந்தஸ்தில் உள்ள ஒருவர் நியமிக்கப்படுவார். இப்பதவியின் அதிகபட்ச பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். தற்போது, இணைச் செயலர் நிலையில் உள்ள அதிகாரிகள் இந்தப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது உ.பி.யில் 1.65 லட்சம் வக்பு சொத்துகள் உள்ளன.