நேபாள பிரதமர் பாலேந்திர ஷா
புதுடெல்லி: இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று (23-ம் தேதி) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
நேபாள பிரதமராக கடந்த மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு, பாலேந்திர ஷா முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த அவரை, விமான நிலையத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா வரவேற்றார்.
இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கும் பாலேந்திர ஷா, எரிசக்தி, நீர்மின்சக்தி, ரயில் இணைப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்க உள்ளார். மேலும், பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகத் திகழ்கிறது.
அந்நாட்டின் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் இந்தியாவின் பங்கு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக உள்ளது. நேபாளத்தின் பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 80 சதவீதத்தை இந்தியா பெறுகிறது. எனவே, வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது.
பிஹாரின் ரக்சவுல் நகரிலிருந்து நேபாளத் தலைநகர் காத்மாண்டு வரை பயணிகள் மற்றும் சரக்குகளைக் கொண்டு செல்லும் வகையில் புதிய ரயில் பாதை அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், ராமாயணத்துடன் தொடர்புடைய அயோத்தி, ஜனக்பூர் தாம் ஆகிய நகரங்களுக்கு இடையே புதிய பயணிகள் ரயில் சேவையைத் தொடங்குவது குறித்தும் இரு நாடுகளும் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு விரிவாக்கம், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், பேரிடர் மீட்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.