புதுடெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், உத்தரப் பிரதேசத்தின் நாராயணி நதியில் ஏழு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. மீட்கப்பட்ட உடல்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்க முடியாமல் அம்மாநில போலீஸார் திணறி வருகின்றனர்.
உ.பி.யின் நேபாள எல்லையில் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு கங்கையின் கிளையான நாராயணி நதி ஓடுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நாராயணி நதியில் குப்பைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மட்டுமல்லாமல், சடலங்களும் அடித்து வரப்பட்டன.
இந்த நிலையில், நேற்று இரவு ஏழு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. சடலங்களைக் கண்ட உ.பி வாசிகள் மிகுந்த துயரத்துக்கும் அச்சத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
டெல்ஃபால் பகுதியில் உள்ள பேதிஹாரி அருகே உள்ள நாராயணி நதி தடுப்புச் சுவர் அருகே எல்லைப் பாதுகாப்புப் படை (எஸ்எஸ்பி) மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு (எஸ்டிஆர்எப்), இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூன்று சடலங்களை மீட்டுள்ளனர். அருகிலுள்ள டெல்ஃபால் பகுதியில் மேலும் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
குஷி நகரின் கடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிஸ்வா கோபால் கிராமத்துக்கு அருகில், சிடவுனி கரைப் பகுதியில் சிறிது இடைவெளியில் அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் மீட்கப்பட்ட சடலங்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது.
இந்தச் சடலங்கள் யாருடையவை என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலங்கள் பேதிஹாரியில் உள்ள தடுப்பு சுவர்களில் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இந்தியர்களா, நேபாளிகளா எனக் கண்டறிய முடியாத நிலையில் உடல்கள் உள்ளன. எனவே, அவை தொடர்பான புகைப்படங்களை நேபாள அரசுக்கும், இந்தியாவின் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் ரசுவா பகுதியில் உள்ள போட்டேகோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் அளவில் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, எல்லையோரம் வசிக்கும் உ.பி பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வெள்ள நீரில் சடலங்கள் மற்றும் பிற பொருட்கள் அடித்து வரப்படுவதால், கண்காணிப்பை அதிகரிக்கவும், வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் உ.பி அரசு உத்தரவிட்டுள்ளது.