ராகுல் காந்தி
புதுடெல்லி: ‘இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் எழுத்துக்கள் வெறும் வரலாறு மட்டுமல்ல, அவை இந்தியாவின் வளர்ந்து வரும் மனசாட்சியின் பதிவு’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
‘ஜவஹர்லால் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்' டிஜிட்டல் மயமாக்கல் நிறைவடைந்துள்ளது. ஜவஹர்லால் நேருவின் படைப்புகள் இப்போது 100 தொகுதிகளின் முழு தொகுப்பாக ஆன்லைனில் உள்ளது. இதில் சுமார் 35,000 ஆவணங்கள் மற்றும் நேருவுடன் தொடர்புடைய சுமார் 3,000 விளக்கப்படங்கள் உள்ளன. அவை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்ய இலவசமாகக் கிடைக்கின்றன.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நேருவின் எழுத்துக்கள் வெறும் வரலாறு மட்டுமல்ல, அவை இந்தியாவின் வளர்ந்து வரும் மனசாட்சியின் பதிவு. நமது நாட்டின் ஜனநாயகப் பயணத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும், அவரது வார்த்தைகள் ஒரு சக்திவாய்ந்த திசைகாட்டியாக இருக்கின்றன.
இந்த படைப்புகள் இப்போது டிஜிட்டலில் வெளியாகியுள்ளது. இது தேடக்கூடியது மற்றும் அனைவருக்கும் இலவசம் என்பதை சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது தொடர்ந்து விரிவடையும்.” என்று தெரிவித்து ஜவஹர்லால் நேரு டிஜிட்டல் ஆவணக் காப்பகத்தின் இணைப்பைப் பகிர்ந்து கொண்டார்.
இதுபற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உண்மைகள் எப்போதும் உண்மைகள்தான், உங்கள் விருப்பங்களின் காரணமாக அவை மறைந்துவிடாது. ஜவஹர்லால் நேரு பற்றிய வரலாற்றை வேண்டுமென்றே திரித்து, தவறான தகவல்கள் பரப்பப்படும் ஒரு சகாப்தத்தில், உண்மையைக் கண்டறிய அவரின் எழுத்துக்களை டிஜிட்டல் மயமாக்குவது மதிப்புக்குரியது. nehruarchive.in நேரு ஆவணக் காப்பகம் இப்போது டிஜிட்டலில் கிடைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று தெரிவித்தார்.