புதுடெல்லி: நீட் மறுதேர்வை முன்னிட்டு ஜூன் 22-ம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் கசிவு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. வரும் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இதில் வினாத்தாள் கசிவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. நீட் மறுதேர்வு வினாத் தாளை தயாரித்த பேராசிரியர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே 3-ம் தேதி தேர்வின் போது அஞ்சல் துறை வாகனங்கள் மூலம் பல்வேறு நகரங்களுக்கு வினாத் தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த முறை விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் நீட் மறுதேர்வு வினாத் தாள்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த மாத நீட் தேர்வின்போது டெலிகிராம் செயலி மூலம் வினாத் தாள் விற்பனை செய்யப்பட்டது சிபிஐ விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஜூன் 22ம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நீட் மறுதேர்வுக்குப் பிறகு வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஜூன் 30-ம் தேதி வரை டெலி கிராம் செயலியில் எடிட்டிங் வசதி முடக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பதுறை பிறப்பித்திருக்கிறது.
இதுகுறித்து நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்த மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு என்டிஏ நன்றி தெரிவிக்கிறது.
கடந்த சில வாரங்களாக பேப்பர் லீக்டு நீட், ரீ- நீட் 2026, பிரைவேட் மாஃபியா, ரீ- நீட் மாபியா மற்றும் அதுபோன்ற பெயர்களில் டெலி கிராம் செயலியில் பல்வேறு மோசடி கும்பல்கள் செயல்பட்டன. இந்த கும்பல்கள் நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்கள், குடும்பத்தினரை டெலிகிராம் வாயிலாக அணுகி சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை கோரின.
இது தொடர்பாக அகமதாபாத் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் 8 டெலி கிராம் சேனல்களை முடக்கினர். இந்த சேனல்களை இயக்கிய மோசடிக் கும்பலின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒரு மாதத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தொடர்பு கொண்ட மோசடி கும்பல் சுமார் ரூ.1.5 கோடி வரை பணம் பறித்திருக்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு ஜூன் 22ம் தேதி வரை டெலி கிராம் செயலிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நேர்மையாக, நம்பகமான முறையில் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று என்டிஏ உறுதி அளிக்கிறது. மாணவர்கள் சமூக வலை தளங்களில் வெளியாகும் வதந்திகள், தவறான தகவல்களை நம்பக்கூடாது. மொபைல்போன், சமூக வலை தளம் வாயிலாக மோசடி கும்பல்கள் தொடர்பு கொண்டால் 1930 எண், http://cybercrime.gov.in இணையத்தில் புகார் செய்யலாம். மேலும் என்டிஏவின் உதவி எண்கள் 011- 4075 9000 / 011- 6922 7700 மற்றும் neetug@nta.ac.in மின்னஞ்சலிலும் புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு என்டிஏ தெரிவித்துள்ளது.
கைதானவர் தேர்வு எழுத அனுமதி: நீட் வினாத் தாளை ரூ.10 கோடிக்கு விற்ற குற்றச்சாட்டின் பேரில் ஹரியானாவின் குர்கானை சேர்ந்த மாணவர் யஷ் யாதவ் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவருடைய மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், நீட் மறுதேர்வு எழுத அனுமதி வழங்கியது. சிறை அதிகாரிகள் அவரை அழைத்துச் செல்லவும் உத்தரவிட்டது.