இந்தியா

“புதுச்சேரியில் என்டிஏ அரசு ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது!” - அமித் ஷா

மோகன் கணபதி

காரைக்கால்: புதுச்சேரியில் உள்ள என்டிஏ அரசு, ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, சுயமாக இயங்கும் அரசை அளித்திருக்கிறது, அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்கி இருக்கிறது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்காலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இரண்டு காரணங்களுக்காக நான் புதுச்சேரிக்கு வந்துள்ளேன். ஒன்று, பிரதமர் மோடி - முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் புதுச்சேரிக்கு செய்துள்ள பணிகள் குறித்த அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்க வந்துள்ளேன். இரண்டாவது, இண்டியா கூட்டணியின் தீய நோக்கத்துடன் கூடிய முகத் திரையை கிழித்தெறிய வந்துள்ளேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, புதுச்சேரியில் இரட்டை இன்ஜின் அரசு அமைக்கப்பட்டது. புதுச்சேரியில் என்டிஏ அரசு மூன்று வேலைகளைச் செய்துள்ளது. ஒன்று, ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இரண்டாவது, சுயமாக இயங்கும் அரசை புதுச்சேரியில் அமைத்திருக்கிறது. மூன்றாவது, இங்கே அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது.

          

கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அவர்களுக்கு எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். காங்கிரஸ் இதனை வாடிக்கையான ஒன்றாகவே எடுத்துக்கொண்டது. நாட்டின் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ இத்தகைய தாக்குதல்கள் பற்றி எதுவும் பேச மாட்டார்கள்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாத தாக்குதல்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நாம் அவர்கள் பாகிஸ்தானில் தங்கி இருந்த இடத்தை குறி வைத்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினோம். இரண்டாவதாக, பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல்களை நடத்தினோம். இறுதியாக, ஆபரேஷன் சிந்தூரை அரங்கேற்றி அவர்களின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.

இந்தியாவை தீய நோக்கத்துடன் பார்க்கும் எண்ணத்தை பிரதமர் மோடி இன்று அழித்துவிட்டார். அவர், நாட்டு மக்களுக்கு வளமையை மட்டும் அளிக்கவில்லை, வலுவான பாதுகாப்பையும் அளித்துள்ளார்.

புதுச்சேரி மக்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும், பிஜேபி மீதும், மோடி மீதும், ரங்கசாமி மீதும் மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். கடந்த 2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் புதுச்சேரி மக்கள் நமக்கு 44% ஆதரவு அளித்தார்கள். 30 தொகுதிகளில் 16 தொகுதிகளை நமக்கு அளித்தார்கள். இந்த முறை 60% வாக்குகளையும், 24 இடங்களையும் நாம் பெறுவோம்.

இதற்கு முன்பு புதுச்சேரியை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மிக மோசமான ஆட்சியை அளித்தார். அந்த மோசமான 5 ஆண்டுகளில் ஊழல் மட்டுமல்ல, அமைப்புகளும் சீர்கேட்டைச் சந்தித்தன. காந்தி குடும்பத்துக்கான ஏடிஎம் ஆக புதுச்சேரியை, நாராயணசாமி மாற்றி வைத்திருந்தார். அவரது ஒரே நோக்கம், காந்தி குடும்பத்தின் கஜானாவை நிரப்புவது மட்டும்தான். கல்வி நிலைய இடங்களை விற்றவர் நாராயணசாமி. எஸ்சி, எஸ்டி-க்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் கூட அவர் ஏலம் விட்டார். அவரது ஆட்சிக்கால ஊழல் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. போக்குவரத்து மாஃபியாக்களுக்கு, புதுச்சேரியை முழுவதுமாக அவர் திறந்துவிட்டார்.

வளர்ச்சி திட்டங்களுக்காக புதுச்சேரிக்கு கொடுக்கப்பட்ட நிதியில், ரூ.15,000 கோடி அளவுக்கு அவர் ஊழல் செய்துள்ளார். சிஏஜி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. ரூ.15,000 கோடி என்றால், அது புதுச்சேரிக்கான மூன்று ஆண்டு பட்ஜெட் தொகை. அவரது ஆட்சிக்காலத்தில் இங்கே ஒரு தொழில்கூட தொடங்கப்படவில்லை.

என்டிஏ அரசு, கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கை சீர் செய்துள்ளது. அமைப்புகளையும் சீர் செய்துள்ளது. வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த புதுச்சேரியை நாம் உருவாக்கியே தீருவோம்.

அடுத்த 5 ஆண்டுகளில் நாம் மூன்று துறைகளில் கவனம் செலுத்த இருக்கிறோம். ஒன்று, புதுச்சேரி மீனவர்களின் பொருட்கள் உலகச் சந்தைகளை எட்ட வழி ஏற்படுத்துவோம். இரண்டு, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தரவுகள் மையங்கள் ஆகியவற்றுக்கான இடமாக நாம் புதுச்சேரியை மாற்றுவோம். இதன்மூலம், புதுச்சேரி இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் ஜோஹோ அமைப்பு புதுச்சேரியில் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறது. எஸ்ஆர் நிறுவனம் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறது. புதுச்சேரியில் தயாரிக்கப்பட இருக்கும் லேப்டாப்கள், உலகின் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியாக இருக்கின்றன.

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனும், இங்கிலாந்துடனும், அமெரிக்காவுடனும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகளுக்கு ஆதாயம்தான் ஏற்படுமே தவிர எந்த ஆபத்தும் ஏற்படாது. அவர்களுக்கு முழு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதுச்சேரிக்காக பல திட்டங்களை பிரதமர் மோடி அளிக்க இருக்கிறார். எனவே, என்டிஏ அரசுக்கு உங்கள் முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும். இவ்வாறு அமித் ஷா உரையாற்றினார்.

SCROLL FOR NEXT