மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி)-யின் தலைவர் சரத் பவாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது மகளும் கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுப்ரியா சுலே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தந்தையை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் தனது செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டு, பயணங்களை தவிர்க்க வேண்டும். ஆனால், அவர் கேட்பதில்லை. தனது பணியின் மீது அவருக்கு அவ்வளவு ஈடுபாடு. உங்கள் அக்கறைக்கும் நல்வாழ்த்துக்கும் நன்றி.’ என தெரிவித்துள்ளார்.
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சுப்ரியா சுலே, தனது தந்தையைக் கவனித்துக் கொள்ளும் நோக்கில் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சரத் பவார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் மருத்துவமனைக்கு விரைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் படேல், “சரத் பவாரின் உடல்நிலை சீராக உள்ளது. கவலைப்பட ஒன்றும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
85 வயதாகும் சரத் பவார் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி மற்றும் இருமல் காரணமாக கடந்த 2-ம் தேதி புனேவில் உள்ள ரூபி ஹால் கிளினிக்கில் சரத் பவார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு மற்றும் சுவாசத் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.