அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 4 அமைச்சர்களுக்கு நக்சலைட்டுகள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் துர்கேஷ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு அவை தொடங்கியதும், ஆளுநர் அப்துல் நசீர் அகமது உரையை வாசித்தார். அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி உட்பட அக்கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏ.க்களும் பேரவைக்குள் வந்தனர். அவர்கள் வந்த போது ஆளும் கட்சியினர், பாஜக, ஜனசேனா எம்எல்ஏக்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் ஜெகன் ஆட்சியில் நடைபெற்ற கலப்பட நெய் விவகாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘கோவிந்தா கோவிந்தா’ என கூச்சலிட்டனர்.
இதற்கு, ஜெகன் கட்சியினர் ‘ஜெய் ஜெகன்’ என பதில் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் பரபரப்பு சலசலப்பு ஏற்பட்டது. உடனே, நாங்கள் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று ஜெகன் கட்சி எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தினர். ஆளுநர் உரை முடிந்த பின்னர், மக்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கலாம் என சபாநாயகர் பல முறை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. உடனே தங்களை பேச அனுமதிக்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து, பேரவை தலைவர் அய்யண்ண பாத்ருடு செய்தியாளர்களிடம் பேசுகையில், இனி வியாழக்கிழமை (இன்று) முதல் பேரவையில் ஏஐ தொழில் நுட்பம் மூலம் வருகை பதிவு செய்யப்படும். அந்த 11 பேர் (ஜெகன் எம்எல்ஏ.க்கள்), 11ம் தேதி, 11 நிமிடங்கள் மட்டுமே இருந்தனர்” என்று சிரித்தபடி கூறினார்.
அமராவதியில் பேரவை கூட்டத்தின் இடையே அமைச்சர் துர்கேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”நக்சலைட்டுகள் அமைப்பினர் பெயரில் ஆந்திர அமைச்சர்கள் ரவீந்திரா, சத்யகுமார், சத்யபிரசாத் மற்றும் எனக்கு என மொத்தம் 4 பேருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. தனிப்பட்ட முறையிலும், துறை சம்பந்தமாகவும் யாருக்கும் எந்த பிரச்சினைகளும் இல்லை. ஆனால், மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இது நக்சலைட்டுகள் எழுதியதா? அல்லது நக்சலைட்டுகள் பெயரை பயன்படுத்தி வேறு நபர்கள் எழுதினார்களா என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும்” என்று கூறினார்.