புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியும் முடிவு செய்துள்ளன.
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் கூறும்போது, “நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்” என்று தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க சரத்பவாரின் மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரிலே சுலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அவர் கூட்டத்தைப் புறக்கணித்தார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க அவர் கண்டிப்புடன் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசியவாத காங்கிரஸுக்கு (சரத் பவார் அணி) மக்களவையில் 8 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யும் (சரத் பவார்) உள்ளனர். விரைவில் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் மகாராஷ்டிர அரசில் அவரது கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தும் திமுக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
மேலும், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு மாறிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பிஆர்எஸ் நிபந்தனை
தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நாங்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்போம். தெலங்கானா மாநிலத்துக்கு எந்த அநீதியும் இழைக்க கூடாது. தென்னிந்தியாவில் நாடாளுமன்ற தொகுதிகளைக் குறைக்கக் கூடாது ஆகிய நிபந்தனைகளுடன் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். தெலங்கானா நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, எங்களுடைய 3 மாநிலங்களவை உறுப்பினர்களும் இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.
மகளிர் இட ஒதுக்கீட்டை நாங்கள் எப்போதுமே எதிர்த்தது கிடையாது. அதனை நடைமுறைப்படுத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம். மேலும், வரும் 2051-ம் ஆண்டு வரை மாநிலங்களுக்கு இடையிலான நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதத்தில் எந்த மாற்றங்களும் செய்ய கூடாது என்ற பாதுகாப்பு அம்சமும் தொகுதி மறுவரையறையில் இடம்பெற்று உள்ளது.
தொகுதி மறுவரையறையால் தெலங்கானாவில் தற்போதுள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகள் 26-ஆக அதிகரிக்கும். இவ்வாறு கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார்.