நாசிக்: மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ அலுவலகம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை, மூத்த அதிகாரிகள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும் பல பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக டிசிஎஸ் அலுவலகத்தின் 9 பெண் ஊழியர்கள் அளித்த புகார்களின் பேரில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. டிசிஎஸ் நிறுவன மூத்த அதிகாரிகள் தவுசிப் அத்தர், டேனிஷ் ஷேக், ரசா மேமன், ஷாரூக் குரேசி, ஆசிப் அன்சாரி, ஷபி ஷேக், அஸ்வினி சனானி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மதமாற்ற விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட டிசிஎஸ் பெண் அதிகாரி நீடா கான் தலைமறைவாக உள்ளார். மகாராஷ்டிராவின் தானே நகரில் பணியாற்றும் அவரது கணவர் இக்பால் கானிடம், நாசிக் போலீஸார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 14-ம் தேதி நீடா கான் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் மும்பையில் உள்ள அத்தை வீட்டில் தங்கியிருப்பதாகவும் போலீஸாரிடம் இக்பால் கான் தெரிவித்தார். இதன்பேரில் நாசிக் போலீஸார், மும்பையில் நீடா கானை தேடினர். அவர் தங்கியிருந்த வீடு பூட்டிக் கிடந்தது. இதன்பேரில் 3 தனிப்படைகள் மும்பை முழுவதும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஷாகின் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெண் மருத்துவர் ஷாகின், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் பெண்கள் பிரிவு மூத்த தலைவராக செயல்பட்டு வந்தார். அவருடன் நீடா கானுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நாசிக் போலீஸார் கூறியதாவது: நாசிக் டிசிஎஸ் அலுவலக மதமாற்ற விவகாரத்தின் ஆணி வேரை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி மருத்துவர் ஷாகினுடன், நீடாகான் தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் சமூக வலைதளங்கள் வாயிலாக உரையாடி உள்ளனர். இதுதொடர்பான டிஜிட்டல்தகவல்கள் அழிக்கப்பட்டு உள்ளன. அவற்றை மீட்க தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியை நாடி உள்ளோம்.
எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் நீடா கான் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் போலீஸாருக்கு தவறான தகவல்களை அளித்து வருகின்றனர். இந்த வழக்கில் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீஸார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் உதவியை கோரி உள்ளதாக நாசிக் போலீஸார் தெரிவித்தனர்.