புதுடெல்லி: அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு என் மனைவி எலிசபெத் கோல்பர்ன் பணி நிமித்தமாக பாகிஸ்தான் சென்றிருந்தார். அவருடன் நானும் சென்றேன். அப்போது 10 நாட்கள் அங்கு தங்கி இருந்தோம்.
இது தொடர்பாக விசாரிக்க அசாம் அரசு சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்தது. அக்குழு என்னிடம் ஒரு போதும் விசாரணை நடத்தவில்லை. மேலும் எஸ்ஐடி அறிக்கை சமர்ப்பித்து 6 மாதம் ஆகியும் இதுவரை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அமைதியாக இருந்தார். ஏனெனில் எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இப்போது இந்த விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என கோருகிறார். தவறான தகவலை பரப்பும் அவர் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குடும்பத்தினரிடம் 12 ஆயிரம் பிகா நிலம் இருப்பதை காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தியது. இதனால்தான், முதல்வர் சர்மா எங்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.