லக்னோ: பசுவை தேசிய அன்னையாக அறிவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி பிரமுகர் ஜீஷன் அன்சாரி தனது ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
வாராணசியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே அன்சாரி இக்கடிதத்தை எழுதினார். பின்னர் உள்ளூர் நிர்வாகம் மூலம் அதை பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஜீஷன் அன்சாரி கூறியதாவது: "நான் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன். அதனால்தான் இந்த முயற்சியை எடுத்துள்ளேன். பசு குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து வெவ்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.
பசுவை ‘தேசிய அன்னை' என்று அறிவிப்பதன் மூலம் பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். நாடு முழுவதும் உள்ள மக்களின் உணர்வுகளில் பசுவுக்கு ஒரு தனி இடம் உள்ளது. பசுவுக்கான கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் வகையில், அதை ‘தேசிய அன்னை' என்று அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவதே எனது கடிதத்தின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.