மும்பை: மூதாட்டி தாக்கல் செய்த அவதூறு வழக்கை 20 ஆண்டுகள் கழித்து விசாரிக்கப்படும் என்ற உத்தரவை மறுநாளில் மாற்றி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தாரிணிபென் (90), த்வனி தேசாய் (57) ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு கில்கில்ராஜ் பன்சாலி மற்றும் சிலருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். 2015ம் ஆண்டு ஷியாம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்தச் சம்பவங்கள் தங்களுக்கு மன உளைச்சலையும் துன்பத்தையும் ஏற்படுத்தியதாகக் கூறியுள்ள மனு தாரர்கள், தங்களுக்கு ரூ.20 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் கோரி உள்ளனர்.
இந்த மனு நீதிபதி ஜிதேந்திர ஜெயின் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு முன்பு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜிதேந்திர ஜெயின் கூறியதாவது: தங்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் வழக்கு தாரர்களுக்கு இடையிலான இந்த சட்டப் போராட்டம் ஒரு ‘ஈகோ யுத்தம்’. நீதித்துறை அமைப்பை முடக்கும் ஏராளமான வழக்குகளில் இதுவும் ஒன்று.
இதன் விளைவாக, உண்மையிலேயே முன்னுரிமை தேவைப்படும் விஷயங்களை நீதிமன்றத்தால் கையில் எடுக்க முடியாமல் போகிறது. இந்த விவகாரத்தை ஒரு மன்னிப்பு மூலம் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. ஆனால், 90 வயதான மனுதாரர் இந்த அவதூறு வழக்கை நடத்துவதில் பிடிவாதமாக இருக்கிறார்.
மனுதாரர் ஒரு ‘மிக மூத்த குடிமகள்' என்ற காரணத்துக்காக மட்டுமே இந்த வழக்குக்கு முன்னுரிமை அளிக்க முடியாது. இதைப் பற்றி நான் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த வழக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இதனை 2046-க்கு பிந்தைய தேதியில் பட்டியலிடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு வரும் ஜூலை 15ம் தேதி விசாரிக்கப்படும் என நேற்று நீதிபதி அறிவித்தார்.