Dead Body
பத்ராசலம்: தெலங்கானா மாநிலம், பத்ராசலம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், பத்ராசலம் பகுதியை சேர்ந்த விவசாயி கண்டி வெங்கண்ணா (45). இவர் கடந்த வாரம் தனது விவசாய நிலத்தில் இருந்தபோது கடும் வெயிலால் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் பத்ராசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் அல்லது அமரர் ஊர்தி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் வேறு வழியின்றி வெங்கண்ணாவின் உடலை சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மருத்துவமனையில் ஓர் அமரர் ஊர்தி இருக்கும் நிலையில் அது வெங்கண்ணாவின் குடும்பத்தினருக்கு வழங்கப்படாதது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் மாநிலத்தின் மருத்துவ உள் கட்டமைப்பு மற்றும் அவசர சேவை குறைபாடுகள் குறித்து அரசியல் ரீதியான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவை காங்கிரஸ் அரசு மீண்டும் துயரத்திற்கும் அவமானத்திற்கும் தள்ளுவதாக பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராம ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது பதிவில், "கேசிஆர் ஆட்சியில் ஏழை மக்களின் இறுதிப் பயணம் கூட பிரத்யேக சேவைகள் மூலம் கண்ணியமாக நடத்தப்பட்டது. இன்றோ, இறந்தவர் உடல்களை குடும்பத்தினர் தங்கள் தோள்களில் சுமக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது நெஞ்சை நொறுக்குவதாகவும் வெட்கக்கேடானதாகவும் இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.