புஷத்: தண்ணீர் தாகத்தால் தவித்த குரங்கு ஒன்று பேருந்தை வழிமறித்து பயணிகளின் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த சம்பவம் பயணிகளை மனம் நெகிழ வைத்துள்ளது.
மகாராஷ்டிராவின் யவாத்மால் மாவட்டத்தில் அரசு பஸ் ஒன்று வாஷிம் பகுதியில் இருந்து புஷத் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்தை அருகில் உள்ள வனப் பகுதியில் இருந்த குரங்கு வழிமறித்து நடுரோட்டில் அமர்ந்தது. இதை பார்த்ததும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அதை விரட்ட முயன்றபோது, அது மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தது.
உடனே பஸ் பயணி ஒருவர் அந்த குரங்குக்கு தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை கொடுத்தார். இதை அந்த குரங்கு ஆவலுடன் குடித்தது. இதைப் பார்த்ததும் மற்ற குரங்குகளும் பேருந்தை சூழ்ந்து கொண்டு தண்ணீர் குடிக்க அலைபாய்ந்தன. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் தாங்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்களை குரங்குகளுக்கு கொடுத்தனர். இந்த காட்சி பயணிகளை மனம் உருக வைத்தது.
நாட்டின் பல பகுதிகளில் வெயில் கடுமையாக இருக்கிறது. வனவிலங்குகளின் தாகத்தை தணிக்க, வனத்துறையினர் குடிநீர்த் தொட்டிகளை அமைக்க வேண்டும் என மக்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.