இந்தியா

கிறிஸ்துமஸின் இரு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற மோடி, நட்டா - அரசியல் முக்கியத்துவம் என்ன?

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் கிறிஸ்துமஸ் அன்று இரண்டு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றனர். இதன்மூலம், கிறிஸ்துவர்களைக் கவர முயல்கிறதா பாஜக எனும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கு 2026-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவை கிறிஸ்தவ வாக்காளர்கள் கணிசமாக இடம்பெற்ற மாநிலங்கள். எனவே, தேர்தலுக்காகவே பாஜக கிறிஸ்தவர்களைக் கவர முயல்வதாகத் தெரிகிறது.

தங்களின் அரசியல் செல்வாக்கு குறைவாக உள்ள இந்த மாநிலங்களில் அதை மேம்படுத்திக்கொள்ளவே பாஜகவின் முயற்சியாகவும் கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் அன்று பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் இரண்டு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி வியாழக்கிழமை டெல்லியில் உள்ள கதீட்ரல் சர்ச் ஆஃப் ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை பிரார்த்தனை மற்றும் கீதங்கள் சேவையில் கலந்துகொண்டார். இதற்கு, டெல்லி ஆயர் டாக்டர் பால் ஸ்வரூப் இந்த சேவையை வழிநடத்தினார். இத்துடன், பிரதமருக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

ஜே.பி.நட்டா டெல்லியில் உள்ள ஒரு கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இவை, இந்துத்துவா சித்தாந்தத்தின் தீவிர ஆதரவுக் கட்சியான பாஜக என்பதற்கு முரணாகவும் உள்ளது.

கேரளாவில் கிறிஸ்தவ மக்கள்தொகை சுமார் 18 சதவீதம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 சதவீதத்துக்கு சற்று அதிகமாகவும் உள்ளது. இதனால், கிறிஸ்தவர்கள் அளிக்கும் ஆதரவு அக்கட்சியின் வெற்றிக்கு உதவும். இருப்பினும், பிரதமர் மோடி ஒரு கிறிஸ்தவ விழா அல்லது நிகழ்வில் பங்கேற்பது இது முதல் முறையல்ல.

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டு விழாக்கள், பிரதிஷ்டை விழாக்கள் மற்றும் கொடியேற்றும் விழாக்கள் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார். மேலும், அவர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கோவில்களில் பூஜை மற்றும் தரிசனம் செய்வதை அடிக்கடி காண முடிகிறது.

இது, பிரதமராக இருந்தபோதிலும், அவர் பெரும்பான்மை இந்து சமூகத்தை மட்டுமே ஆதரவளிக்கிறா என்ற அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதேசமயம், மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, தன் இல்லத்தில் கிறிஸ்தவ பிரதிநிதிகள், ஆயர்கள் மற்றும் பாதிரியார்களை பிரதமர் மோடி சந்தித்து வருகிறார்.

ஏப்ரல் 2023-ல், டெல்லியில் உள்ள சேக்ரட் ஹார்ட் தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டங்களில் அவர் கலந்துகொண்டார். 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் சமூகத் தலைவர்களைச் சந்தித்து கிறிஸ்துமஸ் கொண்டாடினார். 2024-ல், பிரதமர் மோடி மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியனின் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்துகொண்டார்.

பின்னர், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மோடி அரசில் கிறிஸ்தவ தலைவர்கள் எப்போதும் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். பிரதமர் மோடி அமைச்சரவையில் கே.ஜே.அல்போன்ஸ் மத்திய சுற்றுலா அமைச்சராகப் பணியாற்றினார். தற்போது ஜார்ஜ் குரியன் இணை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.

சர்வதேச அளவில், பிரதமர் மோடி கத்தோலிக்க திருச்சபை தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகிறார். கோவிட்-19-இன் பேரழிவால் உலகம் உலுக்கப்பட்டபோது, அவர் 2021-இல் வாட்டிகனில் போப் பிரான்சிஸைச் சந்தித்து, பெருந்தொற்று மற்றும் மனிதநேயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

எனினும், சிறுபான்மையினரின் இஸ்லாமியர் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி நேரடியாக அதிகம் கலந்துகொள்ளவில்லை. சமீபத்தில், பிரதமர் மோடியின் சார்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அஜ்மீர் ஷெரீப் தர்காவில் ஒரு புனிதப் போர்வையை காணிக்கையாகச் செலுத்தினார். இது பிரதமரால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் ஒரு முஸ்லிம் மத மரபாகும்.

பிரதமர் மோடி அடிக்கடி முஸ்லிம் மதத் தலைவர்களைச் சந்திக்கிறார். பல முஸ்லிம் அமைப்புகளும் அவருக்கு மிகவும் பிரியமானவை. இதேபோல், சீக்கியம், பவுத்தம் மற்றும் சமண மதத்தின் மீதும் அவருக்கு ஆழ்ந்த மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது.

பிரதமர் மோடியின் இந்த மதநடவடிக்கைகள் இந்து மதத்தின் மீதான அவரது பற்றை குறைப்பதாகத் தெரியவில்லை. பிரதமர் மோடி ஓர் அரசியல்வாதி என்பதால், அவரது ஒவ்வொரு செயலும் அதே பார்வையில் மதிப்பீடு செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT