இந்தியா

‘‘100 நாள் வேலை திட்டத்தை புல்டோசரால் இடித்து தள்ளியது மோடி அரசு’’ - சோனியா காந்தி

மோகன் கணபதி

புதுடெல்லி: மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை மோடி அரசு புல்டோசர் கொண்டு இடித்து தள்ளவிட்டது என்றும், புதிதாகக் கொண்டு வரப்பட்டிருப்பது ஒரு கறுப்புச் சட்டம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘இருபது ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது MNREGA சட்டம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது எனக்கு இன்னும் நினைவில் நிற்கிறது. இது கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு பயனளித்த ஒரு புரட்சிகர நடவடிக்கை. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, சுரண்டப்பட்ட, ஏழை மக்களுக்கு வாழ்வாதாரமாக மாறியது.

வேலைக்காக ஒருவர் தனது நாட்டில் இருந்தும், கிராமத்தில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் இடம்பெயர்வது இத்திட்டத்தால் நிறுத்தப்பட்டது. வேலைவாய்ப்புக்கான சட்டப்பூர்வ உரிமைகள் வழங்கப்பட்டன. கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் கனவான கிராம சுயராஜ்ஜியத்தை நோக்கிய ஒரு உறுதியான நடவடிக்கையாக MNREGA இருந்தது.

கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசாங்கம், கிராமப்புற வேலையற்றோர், ஏழைகள் மற்றும் வறியவர்களின் நலன்களைப் புறக்கணித்துள்ளது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஏழைகளுக்கு உயிர்நாடியாக இருந்த திட்டம் MNREGA என்பது நிரூபணம் ஆன போதிலும் அத்திட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மோடி அரசு மேற்கொண்டது.

இந்நிலையில், தற்போது MNREGA திட்டத்தையே மத்திய அரசு புல்டோசர் கொண்டு இடித்து தள்ளியது மிகவும் வருந்தத்தக்கது. மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டது மட்டுமல்லாமல், MNREGA திட்டத்தின் வடிவமைப்பையே விவாதம் இல்லாமல், ஆலோசனை இல்லாமல், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை கணக்கில் கொள்ளாமல் தன்னிச்சையாக மாற்றிவிட்டது. இனி, யாருக்கு வேலைவாய்ப்பு, எவ்வளவு, எங்கே, என்ன வகையான வேலைவாய்ப்பு என்பதை டெல்லியில் அமர்ந்திருக்கும் அரசு முடிவு செய்யும்.

MNREGA திட்டத்தை அறிமுகப்படுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது. எனினும், இது ஒருபோதும் கட்சி தொடர்பான விஷயமாக இருக்கவில்லை. இது தேசிய நலன் மற்றும் பொது நலனுக்கான ஒரு திட்டமாகவே இருந்தது. இந்த சட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம் மோடி அரசாங்கம் கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளின் நலன்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் ஏழை சகோதர சகோதரிகளின் வேலைவாய்ப்பு உரிமைக்காகப் போராடினேன். இன்றும்கூட இந்த கறுப்புச் சட்டத்துக்கு எதிராக போராட நான் உறுதிபூண்டுள்ளேன்’’ என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT