இந்தியா

டெல்லி, மத்திய பிரதேசத்தில் ப்ளூடூத் மூலம் இ-ரிக்‌ஷாக்களை கட்டுப்படுத்தி அத்துமீறல்: சர்ச்சைக்குரிய சீன செயலிகளை நீக்க உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ப்ளூடூத் மூலம் இ-ரிக்​‌ஷாக்​களை கட்​டுப்​படுத்தி அத்து​மீறல் நடப்பதால், பிளே ஸ்டோரில் இருந்து சீன செயலிகளை நீக்​க உத்​தரவிடப்பட்டுள்ளது.

டெல்​லி, மத்​திய பிரதேசம் உள்​ளிட்ட வட மாநிலங்​களில் இ-ரிக்‌ஷாக்​கள் அதிக அளவில் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இந்த சூழலில்​தான் சீன நாட்​டின் செல்​போன் செயலி​யான பிஏடி-பிஎம்எஸ்​ (BAT-BMS) செயலியை இ-ரிக்​‌ஷாக்​களை கட்​டுப்​படுத்​து​வதற்கு தவறாகப் பயன்​படுத்​தப்​படு​வ​தாகப் புகார் எழுந்தது.

சாலைகளில் செல்​லும்​போது இந்த செயலி மூலம் அரு​கில் உள்ள இ-ரிக்​‌ஷாக்​களின் லித்​தி​யம் பேட்​டரியை ப்ளூடூத் மூலம் சிலர் கட்டுப்​படுத்​து​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த லித்​தி​யம் பேட்டரி​யில் ப்ளூடூத் செயல்​பாடு உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. அதன் மூலம் ‘டிஸ்​சார்ஜ் சுவிட்ச்’ என்ற ஆப்​ஷனை சிலர் தேர்வு செய்து இ-ரிக்​‌ஷாக்​களின் இயக்​கத்தை நிறுத்தி விடு​கின்​றனர்.

மேலும், சிலர் இந்த செல்​போன் செயலி மூலம் ‘சார்ஜ் சுவிட்ச்’சையும் ஆப் செய்து விடு​கின்​றனர். இதனால் சாலைகளில் ஓடிக்​கொண்​டிருக்​கும் இ-ரிக்​‌ஷாக்​கள் திடீர் திடீரென நின்று விடுகின்​றன.

சீனா​வில் தயாரிக்​கப்​பட்ட விலை குறைந்த பேட்​டரி​களில் பாதுகாப்பு வசதி​கள் பெரிய அளவில் இல்லை என்ற புகார் உள்ளது. இந்​தக் காரணத்​தால் 10 முதல் 15 மீட்​டர் தூரத்​தில் இருந்தே இ-ரிக்​‌ஷா பேட்​டரியை செல்​போன் செயலி மூலம் சிலர் கட்​டுப்​படுத்தி வரு​கின்​றனர் என்ற புகார் எழுந்​துள்​ளது.

தற்​போது இதே​போன்ற செயலை பல்​வேறு மாநிலங்​களில் பலர் பரவலாகச் செய்து வரு​வ​தால் பிரச்​சினை ஏற்​பட்​டுள்​ளது. சாலைகளில் சென்​று கொண்​டிருக்​கும் இ-ரிக்​‌ஷாக்​கள் திடீர் திடீரென நிற்​ப​தால் போக்​கு​வரத்து பாதிக்​கிறது. வேடிக்​கை​யாக ஆரம்​பித்த விஷ​யம் தற்​போது விபரீத​மான நிலைக்கு சென்​றுள்​ளது.

சில மர்ம நபர்​களின் இந்த விஷம செயல் காரண​மாக தங்​களது தினசரி வரு​மானம் பாதிக்​கப்​படு​வ​தாக இ-ரிக்​‌ஷா ஓட்​டுநர்​கள் வருத்​தம் தெரி​வித்து வரு​கின்​றனர். இவர்​களில் பெரும்​பாலானோர் இ-ரிக்​‌ஷாக்​களை வாடகைக்கு எடுத்து இயக்கி வரு​கின்​றனர். போது​மான ஓட்​டம் இல்​லாத​தால் வாடகைக் கட்​ட​ணத்தை உரிமை​யாள​ருக்​குக் கொடுப்​ப​தில் சிக்​கல் எழு​வ​தாக​வும் அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், இந்த செயலி தொடர்​பாக டெல்லி போக்​கு​வரத்து துறை அமைச்​சகம் விசா​ரணையை தொடங்கி உள்​ளது.

இதையடுத்து செல்​போனின் பிளே ஸ்டோரிலிருந்து சர்ச்​சைக்​குரிய பிஏடி பிஎம்​எஸ்​(BAT BMS) மற்​றும் எபோச் லி-ஐயன்​(Epoch Li-ion) ஆகிய செயலிகளை நீக்​க​வும் மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பான உத்​தரவை மத்​திய எலக்ட்​ரானிக்​ஸ் மற்​றும் தகவல் தொழில்​நுட்​ப அமைச்​சகம்​ (எம்​இஐடிஒய்​) பிறப்​பித்​துள்​ளது.

SCROLL FOR NEXT