

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரின் இமயமலை பகுதியில், 12,730 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையிலேயே தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை வருகின்றனர்.
நடப்பாண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் முதல் குழுவை, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, நேற்று முன்தினம் வழி அனுப்பி வைத்தார்.
இந்த யாத்திரை, ஆகஸ்ட், 28-ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் அமர்நாத் செல்லும் பக்தர்களுக்காகப் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: இந்த புனித யாத்திரை ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை அனைவரிடத்திலும் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களை அன்போடும் உபசரிப்போடும் வரவேற்கும் ஜம்மு காஷ்மீர் மக்களைப் பாராட்டுகிறேன்.
யாத்திரை சீராக நடைபெறுவதை உறுதி செய்வதில் ஈடுபட்டுள்ள ராணுவம், போலீஸார், பேரிடர் மீட்புக் குழுக்கள், அதிகாரிகளுக்கு நன்றி. இந்த யாத்திரையின் போது இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்களை பக்தர்கள் பின்பற்ற வேண்டும். இதை பக்தர்களுக்கு நான் அன்புக் கட்டளையாக தெரிவிக்கிறேன்.
1. இமயமலைப் பகுதி மற்றும் புனித யாத்திரைப் பாதைகளின் தூய்மையைப் பேணி, அவற்றின் இயற்கை அழகை பக்தர்கள் பாதுகாக்க வேண்டும்.
2. அதிகாரிகளின் அனைத்து அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும்.
3. ஜம்மு காஷ்மீரின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த, உள்ளூர் தயாரிப்புகளை பக்தர்கள் ஆதரிக்க வேண்டும்.
4. புனிதப் பயணம் முடித்து வீடு திரும்பியதும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது அன்புக்குரியவர்களின் பெயரில் ஒரு மரக்கன்றை நடவேண்டும்.
5. யாத்திரையின் போது ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வை ஊக்குவிக்க வேண்டும்.
இந்த 5 அன்புக் கட்டளைகளையும் பக்தர்கள் பின்பற்றி இந்த புனிதமான அமர்நாத் யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.