திருவனந்தபுரம்: கேரள அரசியல் களம் 2026-ல் மீண்டும் ஒரு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) இடையே நேரடிப் போட்டி நிலவினாலும், பாஜக தனது செல்வாக்கை விரிவுபடுத்த பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.
கடந்த 1982-ம் ஆண்டு முதல், தமிழகத்தைப் போன்றே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்பது கேரளாவின் எழுதப்படாத விதியாக இருந்தது. ஆனால், 2021-ல் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று அந்த வரலாற்றை மாற்றியமைத்தனர். தற்போது 80 வயதை தொட்டுள்ள பினராயி விஜயன், பத்தாண்டு ஆட்சியை நிறைவு செய்யும் நிலையில், கேரளம் மீண்டும் தனது 'பழைய மாற்றத்திற்கான' இயல்புக்குத் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்: தற்போது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி காட்டிய பலம், அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகையில் 27% முஸ்லிம்களும், 18% கிறிஸ்தவர்களும் உள்ளனர். பாரம்பரியமாக யுடிஎஃப் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் இச்சமூகங்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றன.
கேரள தேர்தல் நிலவியல் ஒரு பார்வை: கேரளாவின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் மண்டல வாரியான வாக்கு வங்கி முக்கியப் பங்கு வகிக்கிறது:
வட கேரளம் (48 இடங்கள்): இங்கு முஸ்லிம்கள் சுமார் 47% உள்ளனர். மாநிலத்தின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 63% பேர் இப்பகுதியிலேயே வசிக்கின்றனர்.
மத்திய கேரளம் (53 இடங்கள்): கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதி (சுமார் 28%). கிறிஸ்தவர்களில் 56% பேர் இப்பகுதியில் உள்ளனர்.
தெற்கு கேரளம் (39 இடங்கள்): இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி. இதுவே பாஜகவின் வலுவான கோட்டையாக கருதப்படுகிறது.
முக்கிய மாவட்டங்களின் நிலவரம்: காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் முஸ்லிம்கள் 30%-க்கும் அதிகமாக உள்ளனர் (34 இடங்கள்). எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் 30%-க்கும் அதிகமாக உள்ளனர் (33 இடங்கள்). 9 மாவட்டங்கள் (திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்டவை) இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளாகும் (93 இடங்கள்).
2021-ல் இடதுசாரிகள் நிகழ்த்திய அதிசயம் கடந்த 2011-ல் யுடிஎஃப் கூட்டணி சிறுபான்மையினர் அதிகம் உள்ள 47 இடங்களில் 37 இடங்களைக் கைப்பற்றி (79% வெற்றி) ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 2021-ல் இந்த நிலை மாறியது. சிறுபான்மையினர் அதிகம் உள்ள 47 இடங்களில் எல்டிஎஃப் 19 இடங்களைக் கைப்பற்றி யுடிஎஃப்-ன் கோட்டையைத் தகர்த்தது.
‘ஆக்சிஸ் மை இந்தியா’ கணிப்பின்படி, கடந்த தேர்தலில் 50% முஸ்லிம்களும், 44% கிறிஸ்தவர்களும் இடதுசாரிகளுக்கு ஆதரவளித்தது அவர்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த முறை யாருக்கு வெற்றி? - உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் யுடிஎஃப் கூட்டணிக்குச் சாதகமாக இருந்தாலும், அக்கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம், 2024 மக்களவைத் தேர்தலில் 19% வாக்குகளைப் பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் தனது வாக்கு வங்கியை மேலும் 7% உயர்த்த இலக்கு வைத்துள்ளது.
பாஜக பிரிக்கும் இந்த வாக்குகள் இடதுசாரிகளின் இந்து வாக்கு வங்கியைப் பாதிக்குமா அல்லது காங்கிரஸின் வாக்குகளைப் பறிக்குமா என்பதே தற்போதைய கேள்வி.
எது எப்படியோ சிறுபான்மையினர் அதிகம் உள்ள அந்த 47 தொகுதிகளில் யார் அதிக இடங்களைக் கைப்பற்றுகிறார்களோ, அவர்களுக்கே 2026-ல் கேரள அரியணை கிடைக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.