புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் கூச்சல் குழப்பத்துக்கு இடையே ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026’ எந்தவித விவாதமுமின்றி நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ திரும்பப் பெறக் கோரியும், நீட் போராட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அவையின் மையப்பகுதிக்குச் சென்று முழக்கங்களை எழுப்பித் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவைக்கு தலைமை தாங்கிய ஜெகதாம்பிகா பால், உறுப்பினர்களைத் தங்கள் இடங்களுக்குச் சென்று அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார்.
எனினும் அமளி அடங்காததால், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026 எந்தவித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு கொண்டு வந்த தீர்மானம் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டுக்குழுவில் மக்களவையைச் சேர்ந்த 21 உறுப்பினர்களும், மாநிலங்களவையைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என்றும், 2026 குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீட் விவாதத்துக்கு அரசு தயார்
அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், “நீட் தேர்வு தொடர்பான மாணவர்கள் போராட்டம் குறித்து உடனடியாக விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அரசு மற்றும் 80 சதவீத உறுப்பினர்கள் விவாதத்துக்குத் தயாராக இருக்கிறோம்” எனக் கூறியும் எதிர்க்கட்சிகள் கேட்காததால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.