புதுடெல்லி: இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்த விளம்பரங்கள் வெளியான விவகாரம் தொடர்பாக, மெட்டா இந்தியப் பிரிவின் மேலாண் இயக்குநர் அருண் ஸ்ரீனிவாஸுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. வருகின்ற 9-ஆம் தேதி டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் அவர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
பிபிசி ஐ நடத்திய புலனாய்வு விசாரணையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சார்ந்த விளம்பரங்கள் இடம்பெற்றதும், அவை டெலிகிராம் செயலியில் இயங்கும் சட்டவிரோதக் குழுக்களுக்குப் பயனர்களை வழிநடத்தியதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதன் அடிப்படையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த ஜூலை 3-ஆம் தேதி தானாக முன்வந்து மெட்டா நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
மெட்டா அளிக்கப்பட்ட பதிலைத் தொடர்ந்து, இது தொடர்பாக விரிவான விசாரணை தேவை எனக் கருதிய ஆணையம், தற்போது மெட்டா நிறுவனத்தின் தலைமையை நேரில் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இவ்விவகாரத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் தலையிட்டு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து விளம்பரங்களையும், கணக்குகளையும் உடனடியாக முடக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், போக்சோ சட்டப் பிரிவு 19-ன் படி, இத்தகைய சட்டவிரோதக் குற்றங்கள் குறித்து காவல் துறையினருக்கு ஏன் உடனடியாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறித்தும் மெட்டாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விதிகளில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ள மாட்டோம் என்றும், இத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான கணக்குகளையும் விளம்பரங்களையும் நீக்கியுள்ளதாகவும் மெட்டா நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.