இந்தியா

மீரட்: கணவரை கொலை செய்து டிரம்மில் அடைத்த மனைவி, காதலருக்கு மரண தண்டனை விதிப்பு

அனலி

புதுடெல்லி: கணவரை குத்​திக் கொலை செய்து ப்ளூ டிரம்மில் மறைத்த வழக்​கில் மனை​வி, அவரது காதலருக்கு மரண தண்டனை விதித்தது மீரட் நீதிமன்றம்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்​டைச் சேர்ந்​தவர் சவுரவ் ராஜ்புத். இவரது மனைவி முஸ்​கான் ரஸ்​தோகி. முஸ்கானுக்கு சஹில் ஷுக்லா என்ற காதலர் உள்​ளார். இந்நிலை​யில், தங்​களது காதலுக்கு இடையூறாக இருந்த சவுரவை முஸ்​கானும், சஹிலும் இணைந்து, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்​தி​யால் குத்​திக் கொலை செய்தனர்.

உடலை ப்ளூ டிரம்​மில் போட்டு சிமெண்ட் கான்​கிரீட் கலவை, மணலைக் கொட்​டினர். பின்​னர் ஆயுதம், டிரம்மை மறைத்து வைத்​து​விட்டு இமாச்சல பிரதேசத்துக்கு தப்​பியோடினர். இந்த வழக்​கில் மீரட் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி சஹில், முஸ்கானை கைது செய்தனர்.

நீண்ட விசாரணக்குப் பின்னர் செப்.30-ம் தேதி கணவரை கொலை செய்​து, அதை மறைத்த வழக்​கில் அவரது மனைவி முஸ்​கான், ​காதலர் சஹில் ஆகியோர் குற்றவாளிகள் என மீரட் நீதி​மன்​றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது. கணவரை குத்​திக் கொலை செய்து ப்ளூ டிரம்​மில் மறைத்த வழக்கில் மனை​வி, அவரது காதலர் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார் மீரட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் மிஷ்ரா.

குற்றம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி, ‘தண்டனை என்பது தர்மம்’ என்று மகாபாரதத்தை மேற்கோள் காட்டி தண்டனை விவரத்தை அறிவித்தார். தண்டனை விவரம் வெளியானதும், நீதிமன்றத்துக்கு வெளியில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தண்டனை விவரம் அறிவிக்கப்படும்போது நீதிமன்றத்தில் சவுரவின் தாயும், அவரது சகோதரரும் இருந்தனர். குற்றவாளிகள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

தண்டனை விவரத்தை நீதிபதி வழங்கியவுடன் சவுரவின் தாயார் அளித்தப் பேட்டியில், “தம்பதிகள் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து அவரவர் வழியில் வாழலாம். மாறாக, வன்முறையைக் கையில் எடுக்கக் கூடாது. உங்களுக்கு வாழப் பிடிக்கவில்லை என்பதற்காக இன்னொருவரின் பிள்ளையைக் கொல்லாதீர்கள்.

இதுபோன்ற கொடுங் குற்றங்களைச் செய்தால் கொடூர தண்டனைகளைத் தான் எதிர்கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை என் மகன் இறக்கவில்லை. என் மனதில் என்றும் நினைவுகளாக வாழ்வான்” என்றார்.

முன்னதாக, முஸ்கானின் பெற்றோர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அதில் தங்கள் மகள் செய்த குற்றத்துக்காக உச்சபட்சமாக மரண தண்டனை வழங்கினாலும் கூட எதிர்க்க மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT