குறியீட்டுப் படம்

 
இந்தியா

ஜம்மு காஷ்மீர் | புர்கா அணிந்து மகப்பேறு அறைக்குள் செல்ல பேராசிரியை எதிர்ப்பு - மாணவிகள் போராட்டம்

மோகன் கணபதி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் தோடா நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு அறைக்குள் புர்கா அணிந்து மருத்துவ மாணவிகள் செல்வதற்கு பேராசிரியர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் தோடா நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 150 மாணவர்கள் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர். இவர்களில் பலர் மாணவிகள்.

இந்நிலையில், இந்த மருத்துவக் கல்லூரியின் பேராசிரியை ஒருவர், புர்கா அணிந்த மருத்துவ மாணவிகள் மகப்பேறு அறைக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பேராசிரியைக்கு எதிராக மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக உள்ள மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து இக்ரா என்ற மாணவி கூறுகையில், “நாங்கள் ஏன் புர்கா அணியக்கூடாது? புர்கா அணிவது தனக்குப் பிடிக்காது என்று வெளிப்படையாகவே அவர் கூறுகிறார். புர்கா அணிபவர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, அந்த மருத்துவப் பேராசிரியை மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

மற்றொரு மாணவி கூறுகையில், “புர்கா அணியும் பயிற்சி மருத்துவர்களுக்கு மகப்பேறு அறைக்குள் மட்டுமல்லாமல், பேராசிரியையின் அறைக்குள்ளும் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மகப்பேறு அறைக்குள் புர்கா அனுமதிக்கப்படாது என்றால், நீண்ட நகங்களுடன் இருப்பது உள்ளிட்டவற்றையும் தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் பேராசிரியையிடம் கூறினோம். ஏன் புர்காவை மட்டும் குறிவைக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தோடா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் ஒரு குழுவை அமைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த குற்றச்சாட்டுக்கள் முதலில் விசாரிக்கப்பட வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமா என்பது குறித்தும் நாங்கள் பார்க்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய தோடா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மெஹ்ராஜ் மாலிக், “இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சகினா இட்டுவிடம் பேசியுள்ளேன். நிர்வாகம் இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT