புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்கும் இடம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்குகளை மத்தியஸ்தம் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரை செய்தது. ஆனால், இந்த வழக்குகள் நீதிமன்றத்தின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று 3 வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் தெரிவித்துவிட்டனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வாராணசி ஞானவாபி மசூதி தரப்பு வழக்கறிஞர் அக்லாக் அகமது கூறுகையில், “மத்தியஸ்தம் என்பது மசூதியை இந்து தரப்பினரிடம் ஒப்படைப்பதையே குறிக்கும். எனவே, அதன் மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வாய்ப்பில்லை. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறிவிட்டேன்.
இந்து தரப்பினர் கூறுவது போல இடிக்கப்பட்ட எந்தவொரு கோயிலின் இடத்திலும் இந்த மசூதி கட்டப்படவில்லை. இதனால், மசூதியையும் அதன் நிலத்தையும் எதிர்தரப்பினரிடம் ஒப்படைக்கும் கேள்வியே எழவில்லை. எனவே, சட்டப்படி நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் இலியாஸ் கூறியதாவது: கடந்த 1991ல் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு இயற்றியது. அதன் அடிப்படையில், 2019-ல் பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு, மசூதிகள் உள்ளிட்ட எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையையும் மாற்றுவதற்கான மனுவை நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது.
கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அதே நிலை தொடர வேண்டும். அதை மாற்ற முடியாது என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஒரு சொத்து மசூதியாக இருந்தால், அதன் மீது உரிமை கோருவதற்கோ அல்லது அதன் மதத் தன்மையை மாற்றுவதற்கோ நீதிமன்றத்தில் முறையிட முடியாது.
எனினும், மசூதிகளின் மதத் தன்மையை மாற்றக் கோரும் இந்து மனுதாரர்களின் மனுக்களை உச்ச நீதிமன்றம் அனுமதித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சம்பல் ஷாஹி ஜமா மஸ்ஜித் வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் காசிம் ஜமால், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறுகையில், “பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான கேள்வியே எழவில்லை. ஏனெனில், எதிர்தரப்பினருக்கு மசூதி மீது சட்ட ரீதியான அல்லது வேறு எந்த வகையிலான உரிமையும் இல்லை.
அனைத்து ஆதார ஆவணங்களும் மசூதிக்குச் சாதகமாகவே உள்ளன. துரதிருஷ்டவசமாக நீதிமன்றமும் அவர்களின் ஆதாரமற்ற மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இது நீதித்துறை நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தி மசூதியின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சி” என்றார்.